எகிப்தில் இராணுவ டாங்கிகளும் களத்தில் குதித்தன.
எகிப்து ஜனாதிபதி முகமது முர்சியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால் நிலைமையை சமாளிக்க இராணுவ டாங்குகள் களத்தில் இறங்கியுள்ளதாக எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றன.. எகிப்தில் மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.
இதனையடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர் முகமது முர்சி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இவர் ஜனாதிபதியானது முதல் இவருக்கும், நீதித்துறைக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இடைக்கால இராணுவ ஆட்சியின் போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்நாட்டு உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கலைத்தது. ஆனால் ஜனாதிபதி முர்சி, இந்த பாராளுமன்றம் மீண்டும் செயல்படும் என உத்தரவிட்டார். இதனால் ஜனாதிபதி மீது நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் தனக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்க வழி செய்யும் அரசியல் சாசனத்தை முர்சி சமீபத்தில் வெளியிட்டார். இதற்கு எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே தலைநகர் கெய்ரோவில் ஜனாதிபதி மாளிகையை எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு போட்டியாக ஆளும் கட்சி ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் மோதல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த மோதலில் ஐந்து பேர் பலியாயினர், 500 பேர் காயமடைந்தனர். நிலைமை சமாளிக்க ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் டாங்குகள் நிறுத்தப்பட்டு உள்ளன
.
0 comments :
Post a Comment