Wednesday, December 19, 2012

தேசிய அவசர நிலையை பிரகடணப்படுத்துவீர்! அரசாங்கத்துக்கு சஜித் பிறேமதாஸ

நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வருகின்ற அடைமழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருகினால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இதனால் தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

வெள்ளத்தால் 30,000 குடும்பங்களும் 100,000 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ இயற்கைக்கு எதிராக போராட முடியாதென்பது உண்மையேயாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டியது எந்த அரசாங்கத்தின் கடப்பாடாகுமெனவும் அவா் கூறினார்.

இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரையும் உணவையும் கூட வழங்கவில்லை. ஆனால் ஊடக அறிக்கைகள் இதற்கு மாறாக உள்ளன.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்ட வேகத்தையும் அதேசமயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பூரணமாக உதாசீனம் செய்வதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் செல்வந்த, மேட்டுக்குடியினருக்காக 2000 இலட்சம் ரூபா செலவில் கொழும்பு இரவு பந்தயத்தை நடத்தியதன் பின்னாலுள்ள தா்மம் யாதெனவும் அவா் கேட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை மாதிரியாக வைத்தே தான் இதனை கூறவருவதாக அவா் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை என அவா் கூறினார்.

பிரதம நீதியரசா் மீதான குற்றப்பிரேரணையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பதில் காட்டிய வேகத்தை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் காட்ட வேண்டுமெனவும் அவா் கூறினார்.

இரவு கார்பந்தயத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர லம்போகினி வகைக் கார்களில் இறக்குமதிக்கு வரிச்சலுகைகளை வழங்கி நாட்டுக்கு வரவேண்டிய வரி வருமானத்தை கிடைக்காமல் செய்துவிட்டதாகவும் அவா் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினார்.

சகல வளங்களையும் வெள்ள நிவாரண வேலைகளில் ஈடுபடுத்த தேசிய நிலையை பிரகடனப்படுத்த வேண்டுமென அவா் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com