விஜயதாஸ எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: ஆளும் தரப்பு
'ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் ஆளும் தரப்பு இன்று செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க ஒழுங்கு பிரச்சினை ஒன்றை கிளப்பினார்.
முன்னதாக எழுந்த அவர், 'பிரதம நீதியசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப்பிரேரணை மூலம் நாடாளுமன்றம் பதவி விலக்கவுள்ளதை சட்டரீதியாக எதிர்க்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று சபாநாயகர் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இந்நிலையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிராக சட்டரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இது பிழையான நடவடிக்கையாகும். ஆகையால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
ஆளும் தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எ.எச்.எம் அஸ்வரும் திஸாநாயக்கவின் கருத்தை ஆமோதித்தார்.
குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, 'நாடாளுமன்ற உறுப்பினரான ராஜபக்ஷ சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் இவ்வாறு செய்துள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் செயற்படவில்லை.
இந்த வழக்கை தாக்கல் செய்ய முன்னரே ராஜபக்ஷ என்னுடன் பேசினார். இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகாது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் நீதித்துறையுடன் மோதப்;போகக்கூடாது. நீதிபதிகள் அரச ஊடகங்களினால் இன்று விமர்சிக்கப்படுகின்றனர். இவ்வாறு யாரும் செய்யக்கூடாது' என்றார்.
இருத்தரப்பு கருத்துக்களையும் அவதானித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த விடயத்தை கருத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.
0 comments :
Post a Comment