ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு!!
மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதுடன் இதற்காக ஜெனரேட்டர்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை 5 சதவீதமாக குறைப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம் தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, ஜெனரேட்டர்கள் மீதான 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரியை 5 சதவீதமாக குறைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து மாநில நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று ஜெனரேட்டர்களை தொழில் முனைவோர்கள் வாங்கும் போது அவர்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிமாக குறைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளால் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் ஃபர்னஸ் ஆயில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வரிவிலக்கு சலுகையை, அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் நடவடிக்கைகள் மூலம், தொழில் முனைவோர்கள் ஜெனரேட்டர்கள் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment