Tuesday, December 4, 2012

கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றம்

பங்கரவாதத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன் பிரதிகள் ஜ.நா பொதுச் செயலாளர், வெளிநாட்டு தூதரகங்கள், மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அறிக்கையின் விபரம் வருமாறு.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்குள் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நிர்வாகத்தின் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து மரண பயத்தை ஏற்படுத்தும் வகையிலான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனைக் கண்டித்து மறுநாள் அதாவது 28 ஆம் திகதி எமது பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தியமையும் அப்போராட்டத்தை ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் வன்முறையை பிரயோகித்து நசுக்கியமையும் தாங்கள் அறிந்ததே.

மேலும் அதனைத் தொடர்ந்து சில பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தொடர்ந்து தடுத்து வைக்ககப்பட்டுள்ளமையும் இன்னும் பல மாணவர்கள் பொலிசாரால் தேடப்பட்டு வருகின்றமையும் தாங்கள் அறிந்ததே.

இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக இராணுவத்தினராலும் பொலிசாராலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சுற்றாடல் எங்கணும் வீதித்தடைகள் அமைத்தும் சோதனைச் சாவடிகள் அமைத்தும் பல்கலைக்கழக சூழல் ஒரு இராணுவ சூழலாக மாற்றப்படு;ள்ளமையை தாங்கள் அவதானித்திருப்பீர்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தவர்களை சோதனை என்ற போர்வையில் அச்சுறுத்தி பதிவு செய்தல் நடைமுறைகளையும் மேற்கொண்டு பல்கலைக்கழக சூழலை பயப்பீதியில் வைத்திருக்க முனைந்து வருவதனையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள்.

இந்த நிலையில்இ இன்று (03.12.2012) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் ஒன்றில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழலைத் தணிப்பது தொடர்பில் பின்வரும் முன்வைப்புக்களை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் விடுதலை செய்யப்படும் வரை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுவது சாத்தியமற்றது என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மேலும் கைதுகள் இடம்பெறாது என்றும் உறுதியளிக்கப்பட்ட பின்பும் மாணவர்களை நள்ளிரவு வேளையில் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மேலும் நிலமையை மோசமடையச் செய்யும் என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

பல்கலைக்கழக சூழலில் இராணுவமயமாக்கலின் அடையாளங்களாக அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிசாரின் பிரசன்னம் நீக்கப்படாவிடில் இயல்பான சூழலில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன் கொண்டு செல்வது சாத்தியமற்றது என்பதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

பல்கலைக்கழக சூழலுக்குள் (மாணவர் விடுதிகள் உட்பட) எக்காரணங் கொண்டும் அனுமதியின்றி இராணுவம்;இ பொலிசார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் உட்பட்டோர் பிரவேசிக்ககூடாது என்பதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

மேற் கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பல்கலைக்கழக சமூகத்தினை ஒரு பயப்பிராந்திக்குள் உட்படுத்தி அடக்கி வைத்திருக்க முயலும் ஒரு செயலாகும் என்பதனையும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேற்படி விடயங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எமது பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை மீளத்திரும்புவதற்கு உடனடியாக ஆவன செய்யுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களை வேண்டிக் கொள்கின்றது. என்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com