Tuesday, December 11, 2012

ஐக்கிய இராஜ்ஜியத்தின் உழைக்கும் வறியவர்கள் சமூகப் பேரழிவை முகங்கொடுக்கின்றனர்..

(By Julie Hyland ) பழைமைவாத-தாராளவாத ஜனநாயக அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி நெருக்குகையில், ஐக்கிய இராஜ்ஜியத்தின் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒரு சமூகப் பேரழிவிற்கு முகங் கொடுக்கின்றனர். "வறுமையைக் கண்காணித்தல் மற்றும் சமூகத் தனிமைப்படுத்துதல் 2012” என்ற தலைப்பின்கீழ் Joseph Rowntree நிறுவம் நடத்திய ஓர் ஆய்வு தற்போதைய அரசாங்க கொள்கையின் தாக்கத்தை, குறிப்பாக சமூகநலச்சேவை சீர்திருத்தம் பற்றி ஆராய்கிறது.

புதிய கொள்கை நிறுவனத்தினால் (New Policy Institute) எழுதப்பட்டுள்ள இந்த அறிக்கை வறுமையில் வாடும் உழைக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை, உழைப்பு இல்லாத வறுமையான குடும்பங்களின் எண்ணிக்கையவிட அதிகமாகியுள்ளதைக் காட்டுகிறது.

ஓய்வூதியம் பெறுவோரை ஒதுக்கியபின், 6.1 மில்லியன் மக்கள் “உழைக்கும் வறியவர்கள்” என்று உள்ளனர். இது வேலை இல்லா 5.1 மில்லியன் மக்களுடன் ஒப்பிடத்தக்கது. “உழைக்கும் வறியவர்கள்” கடந்த தசாப்தம் முழுவதும் எப்பொழுதும் குறைந்துவரும் ஊதியங்களால் அதிகமாகி வருகின்றனர். குறைந்தப்பட்சம் 4.4 மில்லியன் வேலைகள் மணி ஒன்றிற்கு £7 க்கும் குறைவான ஊதியம் கொடுக்கின்றன. சேவைகள் துறையில் குறைந்த ஊதியம் என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. இதில் உணவுப் பிரிவு, சில்லறை வணிகம், விடுதி, போக்குவரத்து, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் மற்றும் நிதியப் பணிகள் ஆகியவை அடங்கும்.

தொடர்ந்து ஆட்சியில் வந்த அரசாங்கங்கள் குறைந்த ஊதியத்திற்கு ஊக்கம் கொடுத்துள்ளன. முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் முதலாளிகள் ஊதியச் செலவுகளைக் குறைத்து உதவுவதற்காக அடிப்படையில் உதவிநிதி கொடுப்பது போல் வரி விலக்குகளை அறிமுகப்படுத்தியது. இந்த ஆய்வு 2003ல் இருந்து 2012ல் நிதிஉதவி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 50% உயர்ந்துவிட்டதாகக் கண்டறிந்துள்ளது. இந்த உதவிகளையோ 2016 ஐ ஒட்டி அகற்றிவிடப் போவதாக பழைமைவாத/ தாராளவாத ஜனநாயக அரசாங்கம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் முதலாளிகள் பொருளாதார கீழ்நோக்கு நிலையைப் பயன்படுத்தி ஊதியங்களில் கணிசமான வெட்டுக்களையும், பணிநீக்கங்களை செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். உத்தியோகபூர்வ வேலையின்மையில் 2.5 மில்லியன் மக்கள் இருக்கையில், குறைந்த வேலையில் அதாவது தாங்கள் விரும்பும் ஊதியத்துடனான பணியை பெறமுடியாத நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6.5மில்லியன் என்று ஆய்வு காட்டியுள்ளது. வேலையின்மை இன்னும் உயர்ந்தளவாக இல்லை என்பதற்கான முக்கியகாரணி பணி நேரக்குறைப்பு பல துறைகளில் சுமத்தப்பட்டுள்ளதால் என்றும் அது மேற்கோளிட்டுள்ளது.

வறுமையும் வேலையின்மையும் அப்படியே நிலைத்திருப்பதில்லை. மாறாக மில்லியன் கணக்கானவர்கள் பொருளாதார பாதுகாப்பின்மையை எதிர்நோக்குகின்றனர். மக்களில் கிட்டத்தட்ட 18% ஏதேனும் ஒரு நேரத்தில் குறைவூதிய நிலையில் இருந்தனர் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் 33% இனர் நான்கு ஆண்டுக் காலத்தில் குறைவூதிய அனுபவத்தைக் கொண்டிருந்தனர். JSA எனப்படும் வேலைதேடுவோர் உதவிநிதி எக்குறிப்பிட்ட நேரத்திலும் 1.6 என்று இருக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 4.8 மில்லியன் பேராவது JSA ஐ நாடியுள்ளனர்.

உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை இப்பொழுது பொதுநல உதவிகளில் கணிசமான வெட்டுக்கள் வந்ததும் வேலையில் இல்லாத ஏழைகளுடைய எண்ணிக்கையைக் கடந்து விட்டது. கூட்டணி ஆட்சி வரிச் சலுகைகளைக் குறைத்துள்ளது, பொதுநலச் செலவுகளை நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் பிணைத்துள்ளது (இது சில்லறை விலைக் குறியீட்டைவிடக் குறைந்தது ஆகும்), மூன்று ஆண்டுக்காலம் குழந்தைகளுக்கான உதவிகளைத் தேக்கிவிட்டது, வீட்டுவசதிகளுக்கு கொடுக்கப்படும் உதவிகளை குறைத்துவிட்டது மற்றும் மாற்றுத்திறனுடையவர்களுக்கு கொடுக்கப்படும் உதவிகளில் மாறுதல்களையும் கட்டாயப்படுத்துகிறது.

பல குறைந்த வருமானமுடைய இல்லங்கள் ஏற்கனவே அற்ப வருமானத்தில் இன்னும் பல வெட்டுக்களை எதிர்பார்த்துள்ளனர். தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பிரித்தானியாவின் மிக வறிய இல்லங்கள் “2017 ஐ ஒட்டி ஆண்டு வருமானத்தில் 30% வெட்டை எதிர்கொள்கின்றனர்”; இதற்குக் காரணம் பொதுநல உதவிச்செலவுகளில் குறைப்புக்கள்தான்.

ஏற்கனவே ஒரு சராசரி ஐக்கிய இராஜ்ஜிய குடும்பம் சமூக ஒதுக்கீடு, பொதுநல உதவி ஒதுக்கீடு இவற்றில் பொதுப்பணிக் குறைப்புக்களால் £1,200 ஐ இழந்துவிட்டது. ஆனால் இது 2014-2015 ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்களில் மூன்றில் ஒரு பங்கைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

2016-2917 ஐ ஒட்டி பொதுப்பணிகளில் இத்தகைய குறைப்புக்களின் மொத்தத் தொகை மிக வறிய கீழ்மட்ட 10 சதவிகிதத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு £3,995 ரொக்கமாக இருக்கும். அதாவது அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானத்தில் 31.7% என்று இருக்கும்.

TUC இன் அறிக்கைகள் நிதி மந்திரி ஜோர்ஜ் ஒஸ்போர்ன் அவருடைய இலையுதிர்கால அறிக்கையை முன்வைப்பதற்கு ஒரு வாரம் முன்பு வந்துள்ளது. நிதி மந்திரி அவருடைய அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் £10 பில்லியன் வெட்டுக்களைக் கோடிட்டுக் காட்டவுள்ளார். ஐக்கிய இராஜ்ஜியம் மூன்று முறை ஆழ்ந்துபோகும் மந்தநிலையை எதிர்கொள்ளக்கூடும் என்ற குறிப்பு இருந்தாலும், ஒஸ்போர்ன் அரசாங்கத்தின் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் 2016-17க்கும் அப்பால் விரிவுபடுத்தப்படும் என்று முதலில் கூறியதைப் போல் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று நிதிய ஆய்வுக்கூடம் அரசாங்கத்தின் ஆண்டிற்கான பற்றாக்குறைக் குறைப்பு பற்றிய கணிப்பு, இலக்கில் இருந்து £13 பில்லியனைவிட கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதன் பொருள் தற்போதைய சிக்கனக்காலம் அடுத்த பாராளுமன்றம் வரை விரிவாக்கப்படலாம். அதற்கு முன்னர் அறிவித்துள்ளதைவிடக் இன்னும் £11 பில்லியன் செலவுக் குறைப்புக்கள் மூலம் அல்லது வரிவிதிப்பு அதிகரிப்பு மூலம் செய்யப்பட வேண்டும்.

செவ்வாயன்று பிரஸ்ஸல்ஸ் தளத்தையுடைய சிந்தனைக் குழு 2012 Euro Plus Monitor அமைப்பு, The Lisbon Council, ஜேர்மனியின் Berenberg Bank ஆகியவை “ஐக்கிய இராஜ்ஜியம் 2013ல் இருந்து யூரோப்பகுதியைவிட அதிக சிக்கன நடவடிக்கை எடுக்கும் நிலைக்குச் செல்லும்” என்று எச்சரித்துள்ளது.

ஐக்கிய இராஜ்ஜிய பொருளாதாரத்தின் தேக்க நிலை தொழிற்கட்சி, TUC இன்னும் பிற அமைப்புக்களில் இருந்து அரசாங்கம் குறுகிய காலத்திதற்கு அதன் சிக்கனத் திட்டத்தில் இருந்து “ஒதுங்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்ற முறையீடுகளுக்கு வழிவகுத்துள்ளது. TUC தன் ஆய்வு அறிக்கையைப் பயன்படுத்தி ஒஸ்போர்ன் “போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்புத்தான் வேலைகள், ஊதியம், பொதுச் செலவுகளில் மிருகத்தன வெட்டுக்களை உறுதிப்படுத்தியதியதுடன், கணிசமான எதிர்ப்பு இல்லாமல் அவற்றை இயற்றவும் செய்தது.

பொது, தனியார் துறைகளில் நூறாயிரக்கணக்கான வேலைகள் இழப்பு இருந்தபோதிலும்கூட, பணிவிதிகள் போன்றவை கிழிக்கப்பட்டிருந்தும், படரந்துள்ள சீற்றத்தை பெயரளவு எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று TUC முறையாகத் திரட்டல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

அரசாங்கத்தின் கொள்கையை TUC குறைகூறுதல் என்பது மில்லியன் கணக்கான தொழிலாளர்கள்மீது சுமத்தப்படும் துன்பங்களோடு தொடர்பு கொண்டது அல்ல. தொழிற்சங்க அதிகாரத்துவமும் கூட்டணி ஆட்சியைப் போலவே தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் திகைப்பான நிலைமையை உதறித்தள்ளுகிறது. அதன் முக்கிய கவலை பிரித்தானிய முதலாளித்துவம் சர்வதேச அளவில் அதன் முக்கிய போட்டி நாடுகளுடன் போட்டித்தன்மை பணயங்களில் இன்னும் பின்தங்கி நிற்கிறது என்பதுதான்.

தொழிற் கட்சி நிதி மந்திரியை ஒரு “Plan B” இரண்டாம் திட்டத்துடன் வருமாறு கொடுத்துள்ள அழைப்புக்களின் நோக்கமும் இதேதான். தொழிற் கட்சியின் நிதித்துறை செய்தித் தொடர்பாளர் கிறைஸ் லெஸ்லி, “அடுத்த வார வரவு-செலவுத் திட்டம் வேலைகளையும் வளர்ச்சியையும் தோற்றுவிக்கும் திட்டத்தை நிர்ணயிக்க வேண்டும்; அவைதான் பற்றாக்குறையை கீழே கொண்டுவரும்” என்றார்.

கார்டியன் பத்திரிகையில் எழுதிய தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மீச்சர் “பொருளாதாரத்தை உண்மையில் ஆரம்பிக்க உந்துதல் கொடுக்கக்கூடிய, வளர்ச்சியை மீண்டும் தோற்றுவிக்கக்கூடிய ஒரு மாற்றீட்டுத் திட்டம் தேவை” என அழைப்பு விடுத்துள்ளார்.

இவர்கள் இருவருமே இந்த மாற்றீடு குறித்து சமமான முறையில் தெளிவைக் கொண்டிருக்கவில்லை. ஒஸ்போர்ன் “மில்லியனர்களுக்கு அடுத்த ஆண்டு வரிக்குறைப்பைக் கொடுக்கும், அதே நேரத்தில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அதிகம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அவருடைய திட்டம் பற்றி மறு சிந்தனை செய்ய வேண்டும்,” என்று லெஸ்லி கூறியுள்ளார்.

மீச்சர், “வங்கிகளுக்கு எளிதில் கொடுக்கும் அதிகளவு பணத்தை புளக்கத்தில் விடுவதன் (Quantative Easing, i.e., funds for the banks) அடுத்த தவணையான £50 பில்லியன் என்பதில் பாதி பொதுத்துறை முதலீட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும், பெரும் செல்வந்தர்கள் மீது முதலீட்டு ஆதாயவரி விதிக்கப்பட வேண்டும், அல்லது அரசாங்கமும் பெருநிறுவனங்களும் தொழில்துறையை ஊக்குவிக்க சிறப்பு முதலீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய திட்டங்கள் மிகவும் தொடர்பற்றுள்ளதோடு பொருத்தமற்றவை என்றுங்கூடக் கூறலாம். இங்கு தொடர்புடைய விடயம் இலாபத்தை அடைவதில் ஒரு தற்காலிகமாக கீழ்நோக்கி செல்லல் என்பதல்ல, மாறாக உலக முதலாளித்துவ முறையின் வரலாற்று நெருக்கடி 1930களின்போது செய்ததுபோல, மனிதகுலத்தை மந்தநிலைக்கும், வெகுஜன வேலையின்மைக்கும் போருக்கும் தள்ளுகிறது. தொழிற் கட்சியோ, TUC யோ முதலாளித்துவத்திற்கு எதிரான குறைந்தப்பட்ச எதிர்ப்புக்களைக்கூடக் காட்டும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. இரண்டுமே பெருவணிகத்தின் விசுவாசமான கருவிகள்தான். தொழிற்கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் தன் கட்சி அரசாங்கம் அமைத்தால் சிக்கன நடவடிக்கைகளை தொடரும் என வலியுறுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டியுள்ளார்.

இந்த நெருக்கடியில் இருந்து மீளும் வழி கூட்டணிக்கு “போக்கை மாற்றவும்” என்னும் பயனற்ற முறையீடுகளோ அல்லது தொழிற்கட்சி வேறுவிதமாகச் செயல்படும் என்ற பொய் நம்பிக்கைகளோ அல்ல. இதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரளல் தேவை. அது நடவடிக்கை குழுக்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவவும், பொருளாதார வாழ்வை சோசலிச முறையில் மறுசீரமைக்கவும் போராட வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com