உலகம் முழுவதிலும் நாளாந்தம் ஆயிரக்கணக்கான தற்கொலைகள் நிகழ்ந்து வருவதான புள்ளிவிபரக் குறிப்புகள் அதிர்ச்சி தருவனதான். ஆனால் பிரபலமான சில தற்கொலைகளுக்கே ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. ஊடகங்கள் தெரிவு செய்து பிரபலப்படுத்தும் செய்திகளால் மறைப்புக்கு உட்படுத்தப்பட்டுவிடும் மற்றைய செய்திகள் பற்றியும், அவை ஏன் மக்களுக்குக் கிடைக்க விடாமல் செய்யப்படுகின்றன என்பதில் உள்ள அரசியல் பற்றியும் அறிஞர்கள் பலர் கவனப்படுத்தி வருகிறார்கள்.
தற்கொலைகளைத் தவிர்ப்பது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் நடக்கின்றன. தற்கொலைகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டும்போது அவை வேகமாக அதிகரிப்பதாக அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே தற் கொலை செய்திகளை தவிர்த்திடுங்கள் என்று உலகம் முழுமையுமுள்ள மனநல மருத்துவர்கள் பலர் ஊடகங்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்த வண்ணமும் உள்ளனர்.
அண்மையில் ஊடகங்கள் முக்கியப்படுத்திய தற்கொலைச் செய்தி, தென்னிந்திய கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவரான மகாதேவனின் தற்கொலையாகும். மகாதேவன் நன்கு படித்தவர், பொறியியலாளர், பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வியைக் கொக்கியாகப் போட்டு பரபரப்புத் தேடிய ஊடகங்களின் தேவை ஒருபுறமிருக்க, தற்கொலை முடிவுக்கு மனிதர்கள் எவ்வாறு வந்து சேர்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது.
மகாதேவன் தனது வாகன ஓட்டுனரையும் அழைத்துக் கொண்டு காரில், வாகன பற்றரியை மாற்றி வருவதற்கென்றே புறப்பட்டிருக்கிறார். சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வண்டியைத் திருப்பச் சொல்லி, அடையாற்றுப் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஓடிப்போய் நதியில் குதித்து இறந்திருக்கிறார். அவரது அந்தக் கணநேர முடிவுக்குப் பின்னால் இருக்கும் மனித மனத்தின் புதிரும் கணநேர மாற்றங்களும் விளக்கப்பட முடியாதவைதான். தற்கொலைக்கான எண்ணம் தோன்றும் அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால் பிறகு அது நடக்காது, அந்த மனிதர் பின்னர் வெகுகாலம் வாழக்கூடும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
தற்கொலை செய்து கொள்வதற்கு விரக்தி, வேதனை, கைவிடப்பட்ட நிராதரவு நிலை, தோல்வியில் துவண்டுபோதல், பொய்த்துப்போன நம்பிக்கை.... போன்ற பற்பல உணர்வுகள் காரணமாகின்றன. எனினும் முக்கிய காரணங்கள் இரண்டு. சமூக,பொருளாதார காரணிகள் ஒன்று. இரண்டாவது, தனிமனி தனின் மனநிலை மற்றும் குடும்பத்தின் உறவு சிக்கல்கள்!
ஆனால், எல்லாத் தற்கொலைகளிலும் இந்த சமூகத்திற்கு - நமக்கு பங்கு நிச்சயம் உண்டு. இந்த சமூகத்தை, வாழ்வதற்கு முடியாத வகையில் ஆக்கிவைத்திருப்பதில் நாமும்தான் பங்களித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய சமூக நடைமுறைகள், சமூக மதிப்பீடுகள் இவை எல்லாம் இதில் பங்கு வகிக்கின்றன.
பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, குடும்ப உறவுகளில் சிக்கல் போன்றவைக்கு அந்தந்த தனிமனிதர்களின் மனோதிடத்தில் மட்டுமல்ல, நம் சமூக நடைமுறைகள், பண்பாட்டுச்சூழல் போன்றவையும் காரணங்களாகும்.
அன்பு, அரவணைப்பு, மன்னிக்கும் மனோபாவம், மற்றவர் துயர்களைத் தேடியறியும் தன்மை, பிறர்தேவையறிந்து உதவும் தயாளகுணம், கருணை போன்றவைகள் சமூகதளத்தில் மேலெழுந்து வரும் போது வாழ்வு வளப்படுவது மட்டுமல்ல, தற்கொலைகளும் பெருமளவு தவிர்க்கப்படும்!
சகமனிதனின் துன்ப துயரங்களில் அக்கறை கொள்ளாத சுயநலமனிதர்கள் ஒவ்வொருவருமே தங்களைச் சுற்றி நிகழும் தற்கொலைகளுக்கும் சமூக மனிதர்கள் படுகின்ற அவலங்களுக்கும் ஒரு மறைமுக காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை!
No comments:
Post a Comment