ஹேட் வில்லியம் உடல்நிலை குறித்து போலி அழைப்பு:மருத்துவ தாதி தற்கொலை!!
போலியான தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம், கேட் வில்லியம்ஸின் உடல்நிலை குறித்து கேள்வி கேட்டு ஏமாற்றியதால், பிரிட்டன் மருத்துவமனை தாதி ஒருவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.மூன்று மாத கர்ப்பம் தரித்துள்ள பிரித்தானிய இளவரசியார் கேட் வில்லியம்ஸ், கிங் எட்வார்ட் VII எனும் பிரித்தானிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சாதாரண காய்ச்சலால் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்ட கேட் வில்லியம் மறுநாள் காலையிலேயே டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தளமாக கொண்ட 2Day FM எனும் வானொலி சேவையின் இரு டீ.ஜேக்கள், குறித்த மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, பிரித்தானிய மகாராணியார் மற்றும் இளவரசர் சார்லஸ் போன்று குரலை மாற்றிப்பேசி கேட் வில்லியம்ஸின் உடல்நிலை குறித்து விவரம் கேட்டுள்ளனார்.
அப்போது கடமையிலிருந்த ஜசிந்தா எனும் மருத்துவதாதி அவர்கள் உண்மையாகவே அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என நம்பி பேசத்தொடங்கியிருக்கிறார். எனினும் அது 'Hoax Call' எனப்படும் ஒரு போலி அழைப்பு என பின்னரே தெரியவந்திருக்கிறது.
கேட் வில்லியம்ஸின் உடல்நிலை குறித்த தனிப்பட்ட விடயங்களை மற்றுமொரு தாதியே கூறிய போதும், முதலில் அழைப்பு எடுத்தவர் என்ற ரீதியில் ஜசிந்தா பெரிதும் மனமுடைந்து போயிருக்கிறார். இந்நிலையில் இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் அவரது உயிரிழந்த சடலத்தையே காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகமும், கேட் வில்லியம் தம்பதியினரும் ஜசிந்தாவின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு ஆஸ்திரேலிய டி.ஜேக்களும், 'பிரித்தானிய அரச குடும்பத்தினரின் மொழி உச்சரிப்பையே கேலி செய்யவே எண்ணியிருந்ததாகவும், இவ்வளவு பெரிய விபரீதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் மன்னிப்பு கூறியுள்ளனர். அத்துடன் உடனடியாக அவர்களது டுவிட்டர், பேஸ்புக் அக்கவுண்டக்களையும் இடைநிறுத்தியுள்ளனர். எனினும் இச்சம்பவத்திற்கு பிறகு குறித்த FM ற்கு தாறுமாறாக காமெண்டுகள் வந்து குவிந்துள்ளன.
ஒரு மலிவான முயற்சி ஒன்றின் மூலம், நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு உன்னதமான உயிரை பலியெடுத்து விட்டீர்களே என பிரித்தானியர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
நான்கு வருடங்களாக குறித்த மருத்துவமனையில் தாதியாக கடமைபுரிந்து வந்த ஜசிந்தா மீது இதுவரை எந்தவித ஒழுங்கீன குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அவர் மீது சகலருக்கும் நல்ல மரியாதையே இருந்தது என்கிறார்கள் மருத்துவ நிர்வாகிகள்.
அதனால் தான், தான் அறியாது செய்த தவறு ஒன்றினால், இளவரசியாரின் அந்தரங்க விடயங்கள் வெளியுலகுக்கு சென்றுவிடுமோ என அச்சப்பட்டு அவர் தற்கொலை முடிவை நாடியிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த போலி அழைப்பில், ஜசிந்தா பேசிய விடயங்கள் மற்றும் கேட் வில்லியம்ஸின் உடல் நிலை பற்றி கூறப்பட்ட மருத்துவ விபரங்கள் எதனையும் வெளியிடப்போவதில்லை என குறித்த ஆஸ்திரேலிய வானொலி சேவை அறிவித்துள்ளது. ஜசிந்தாவின் மரணம், தனிப்பட்ட விவகாரம் என்பதால் ஊடகத்தலையீடை புறக்கணிக்குமாறு, அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 comments :
There is a limit for fun.A precious life being taken by the utterly useless fun makers .We think that they are now happy and about to target another innocent victim,because they need fun and joy
for ever
Post a Comment