Friday, December 21, 2012

உலகம் அழியும் பீதி: அமெரிக்காவில் கண்காணிப்பு

மாயன் காலண்டர் டிசம்பர் 21-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, இன்றுடன் உலகம் அழிந்து விடுமோ என்ற பீதி பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.உலகம் அழியாது. அது வெறும் கற்பனை என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இருந்தும் சிலர் அதை நம்ப மறுக்கின்றனர். மாயன் இனத்தவர் விண்ணியல் சாஸ்திரத்தில் வல்லுனர்கள்.

அவர்கள் வகுத்த நியதிப்படி இதுவரை நடந்து வந்துள்ளது. அதுபோன்று இதுவும் நடக்க வாய்ப்புள்ளது என நம்புகின்றனர். இதற்கிடையே உலகம் அழிய வாய்ப்பே இல்லை என விஞ்ஞானிகள் உறுதியாக சொன்னாலும் அதுகுறித்த கண்காணிப்பு பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இங்கிலாந்துக்கு சொந்தமான கேமேன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் அரிசோனா ஆகிய இடங் களில் 'டெலஸ்கோப்' மூலம் வானம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பூமியின் மீது ராட்சத எரிகற்கள் விழுகிறதா? சூரியனிடம் இருந்து கடும் வெப்பம் வெளியாகிறதா? அல்லது வேற்று கிரகங்கள் தாறுமாறாக வந்து பூமியை தாக்குகின்றனவா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது ஸ்லூ என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளி பரப்பப்பட்டு வருகிறது. வானவியல் இதழின் செய்தி தொகுப்பாளர் பாப் பெர்மான் அதற்குரிய வர்ணனை செய்து வருகிறார்.

அதே நேரத்தில் மெக்சிகோவில் மாயன் காலண்டர் உருவான மெரிடா பகுதியிலும் மற்றும் உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களிலும் பெரும்பாலானவர்கள் கூடியுள்ளனர்.

உலகம் அழியும் என்ற பீதி ரஷியாவிலும் கிளம்பியுள்ளது. எனவே, அதை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் உலகத்தின் நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ரஷிய மந்திரி தெரிவித்துள்ளார்.

உலக அழிவில் இருந்து தப்ப தெற்கு பிரான்சில் புகாராக் என்ற ஆன்மீக மலையில் தஞ்சம் அடையலாம் என்று வதந்தி பரப்பப்பட்டது அதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

அதேபோன்று துருக்கியில் உள்ள சிரின்ஸ் என்ற நகரம் உலகம் அழிவில் இருந்து தப்பும் என்ற கருத்து நிலவியது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்துள்ளனர்.

அதேபோன்று செர்பியாவில் ரிடாஞ்ச் மலை பகுதி அதிசய மாஜிக் சக்தி வாய்ந்தது. அப்பகுதியில் தங்கினால் உலகம் அழிவில் இருந்து தப்பலாம் என்ற மூடநம்பிக்கை பரவியுள்ளது.

இதனால் அந்த மலையை சுற்றியுள்ள ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு முடிந்து மக்கள் நிரம்பியுள்ளனர்.

இன்று உலகம் அழியும் என்ற பீதி சீனாவிலும் கிளம்பியுள்ளது. 'அல்மிட்டி காட்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பீதியை ஏற்படுத்தினர். இதற்கிடையே ஹெபி மாகாணத்தைச் சேர்ந்த லியூ கியூவான் என்ற விவசாயி கண்ணாடி இழையால் ஆன பெரிய கூண்டுகளை தயாரித்துள்ளார். அதில் தலா 14 பேர் தங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகம் அழியும்போது அதில் பதுங்கி கொண்டால் கடும் புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகளில் இருந்து தப்ப முடியும் என்று பிரசாரம் செய்தார்.

அதை நம்பி ஏராளமானவர்கள் முன்பதிவு செய்து அதற்குள் பதுங்கியுள்ளனர். ஆனால் உலகம் அழியும் என்ற பீதியை நம்பவேண்டாம் என சீன போலீசார் ஆன்லைனில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

1 comment:

  1. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இன்று உலகம் அழியவில்லை .

    ReplyDelete