வடகிழக்கு தமிழ் அதிகாரிகளின் 'மௌனவிரதம்' பீமன்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் பெயருடன் ஆரம்பிக்கப்கப்பட்ட ஆயுதப்போராட்டம் அதே தமிழ் மக்களை வாட்டி வதைத்ததற்கு ஆயுதங்களை கைகளில் தூக்கியவர்களின் கட்டாக்காலித்தனாமான செயற்பாடுகள் மற்றும் அதனை தூண்டிய அரசியல்வாதிகளின் கபடத்தனமான போலிவேடங்கள் எந்தளவுக்கு காரணகர்த்தாவாக இருந்ததோ அதே அளவுக்கு வடகிழக்கு பிரதேசங்களிலுள்ள மற்றும் ஓய்வு பெற்றுச்சென்ற தமிழ் அரச அதிகாரிகளினதும் பங்களிப்பும் இருந்திருக்கின்றது.
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்த கடமைப்பட்ட அதிகாரிகள் சுயநலப்பேய்களாக இருந்திருக்கின்றார்கள் இன்றும் இருக்கின்றார்கள். தமது கடமைகளை நிமிர்ந்து நின்று துணிச்சலுடனும் மக்கள் நலன்சார்ந்தும் செய்வதற்கு மாறாக அரசியல்வாதிகளிடமும் இயக்கங்களிடமும் கடமையை கையளித்துவிட்டு இலங்கை அரசாங்கத்திடமிருந்து மாதமுடிவில் வரும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மனச்சாட்டியை அடகு வைத்துவிட்டு கடமைநேரங்களில் மாற்று வழிகளில் திரவியம் தேடும் செயல்களில் இறங்கியிருந்திருந்தார்கள், இருக்கின்றார்கள். இது வியாபாரமாக , வீட்டுத்தோட்டமாக, வெள்ளாண்மையாக பல்வேறு வழிகளில் இருந்திருக்கின்றது, நடைமுறையிலும் உள்ளது.
இவர்களது இந்த பொறுப்புணர்சியற்ற போக்கும் மாற்றான் கைப்பிள்ளை சிந்தனையும் தமிழ் இயக்கங்கள் தாம் நினைத்த யாவற்றையும் நாடத்தி முடிக்க வழிவிட்டு கொடுத்ததுடன் அதற்கு ஊடக அடிவருடிகள் தம்மால் முடிந்த யாவற்றையும் செய்து கொடுத்திருக்கின்றார்கள், செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இதற்குள்தான் இன்று கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து தமக்கு ஒளிமயமான எதிர்காலமொன்றை தேடி சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்கள் விபச்சாரிகள் என்ற பட்டம் சூட்டப்பட்ட கதையும் அடங்குகின்றது. இப்பெண்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வாதாரமற்று தொழில்தேடி அலையும்போது ஏறெடுத்து பார்த்திராத தமிழ் அரசியல்வாதிகளும் , ஊடகங்களும் இணைந்து அவர்கள் விபச்சாரத்தொழிலுக்காக சென்றிருக்கின்றார்கள் என்றபோது நிலைமைகளை நன்கு அறிந்திருந்த , அவற்றுக்கு தொழில்ரீதியாக தேவையான ஆவணங்களையும் சிபார்சுகளையும் வழங்கியிருந்த அதிகாரிகள் கண்மூடி குருடர்களாகவும், காதுகளை பொத்திக்கொண்டு செவிடர்களாகவும் இருக்கின்றார்கள்.
குறித்த பெண்களில் 15 பேர் தீவிர மன அழுத்தங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, எவ்வித கருணைகாருணியமும் அற்று தமிழ் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அவ்யுவதிகள் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதற்கு தேவையான மருந்துவகைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இல்லாத நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தாராம் என்று வேறு செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.
இச்செய்தியின் உண்மைத்தன்மைதனை அறிந்து கொள்வதற்காக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நுவன் வணிகசேகரவை கடந்த 14ம் திகதி தொடர்பு கொண்டேன். இராணுவத்தில் இணைந்து கொண்ட 15 யுவதிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் 10ம் திகதி திங்கட்கிழமை அனுதிக்கப்பட்டதையும் அவர்கள் சிகிச்சை பெற்று மீண்டும் 13ம் திகதி வியாழக்கிழமை பயிற்சித்தளம் திரும்பியதையும் உறுதி செய்த அவரிடம் நோயின் தன்மை பற்றிக்கேட்டபோது அதற்கான பதிலினை கிளிநொச்சி வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
நோயின் தன்மை பற்றி இராணுவப் பேச்சாளரிடம் கேட்கச் சென்று மூக்குடைபட்ட வேதனையுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அத்தியட்சகர் கார்த்திக் அவர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி குறித்த யுவதிகளின் நிலைமைகள் குறித்து வினவினேன்.
எங்களுக்கு தனிப்பட்ட நோயாளிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரம் கிடையாது எனவும் விபரங்களை பெறவேண்டுமாயின் சுகாதார அமைச்சின் செயலாளரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.
இது தனிப்பட்ட ஒரு நோயாளியின் விடயமல் அல்ல, இவ்விடயம் தொடர்பில் பல்வேறு வகையான ஊடகங்கள் பல்வேறு வகையான செய்திகளை வெளிக்கொண்டுவந்துள்ள நிலையில் நீங்கள் மௌனம் காப்பது அவ்வாறான செய்திகளுக்கு மறைமுகமாக உதவுதாக அமைகின்றது என தகவல் அறியும் உரிமையை சற்று அழுத்தியபோது, குறித்த யுவதிகளுக்கு சிகிச்சை அளித்த வைத்திய நிபுணரை தொடர்பு கொண்டால் அறிந்து கொள்ளலாம் எனக்கூறிய அவர் டாக்டர் சிவதாசஸ் ன் தொடர்பு இலக்கத்தை தந்து கழுவிய மீனில் நழுவிய மீனானார்.
மனோவியல் நிபுணரான டாக்டர் சிவதாஸ் அவர்கட்கு தொடர்பினை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்களின் எவ்வாறான நோய்க்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற தகவலை அறிய முற்பட்டபோது இங்கு குற்றஞ்சுமத்தப்படுகின்ற அனைத்து அதிகாரிகளிடத்துமிருந்து வேறுபட்டவராக காணப்பட்டார்.
நிலைமை தொடர்பில் முழுமையான விபரத்தினை தரமுடியும். ஆனால் வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு பஸ்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன். பின்னணியில் சத்தமாக உள்ளது. உங்களுக்கு இடைஞ்சல் இல்லையாயின் என்னால் கூறமுடியும் என்றதுடன் தொடர்ந்து நிலைமைகளை விளக்கினார்.
அதன் இணைப்பு இங்கே உள்ளது.
விடயங்கள் திரிபு படுத்தப்படுகின்றபோது நமிட்டு சிரிப்புடன் குளம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் அதிகாரிகள் மத்தியில் இவ்வாறனவர்களும் இருக்கின்றார்கள் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட தயங்கவில்லை.
குறித்த பெண்கள் எவ்விதமான பாலியில் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்திய அவர் அப்பெண்கள் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் எனத் தங்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை நீக்குங்கள் என வைத்தியரிடம் கேட்டதாகவும் கூறினார். மேலும் மேல் மனம் , ஆழ் மனம் என்கின்ற இரு மனங்களுக்குமிடையே ஏற்பட்ட உள்முரண்பாடு காரணமாகவே இவர்கள் மன உளைச்சல் நோய்க்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்றார்.
அதாவது இலங்கையிலே நிரந்தர வருமானமற்ற பெண்ணொருவருக்கு இன்று வாழ்கைத்துணை என்பது எட்டாக்கனியாகவே உள்ளதான நிலையில் தொழிலொன்றை தேடி அதனூடாக சிறந்த வாழ்கை, திருமண பந்தம் என்ற எதிர்பார்ப்புக்களுடன் இராணுவத்தில் இணைந்த அவர்களை ஒரிரு வார காலங்களுள் பாலியல் தொழிலாளிகள் என வர்ணித்ததன் ஊடாக அவர்களது வாழ்கை கேள்விக்குறியாகிவிட்டது என ஏற்பட்ட உள்மன முரண்பாடுகளினூடாகவே இந்த நோய் இவர்களை பாதித்திருக்கவேண்டும் என்ற நிலைக்கு வைத்தியரின் விளக்கத்தினூடாக வரமுடிகின்றது.
எனவே இவர்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டமைக்கான முழுப்பொறுப்பையும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் இந்நோயினால் நிரந்தராமாக பாதிக்கப்படுவார்களாயின் அவர்களது வாழ்நாள் முழுவதுக்குமான பராமரிப்பு செலவிலிருந்து உரிய நஷ்டஈட்டினையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறிதரன் செலுத்தவேண்டும்.
மேலும் சிறிதரன் போன்றோரது விஷமத்தனங்களை முறியடிப்பதற்கு கடந்தகால அதிகாரிகளைப் போல் அல்லாது துணிவுடன் செயற்பட்ட டாக்டர் சிவதாஸ் போன்று சகல அதிகாரிகளும் உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரும்போது, ஊடகங்களின் விஷமப்பிரச்சாரங்களும் முறியடிக்கப்படும்.
இதற்கு ஏதுவாக இலங்கை அரசும் உடனடி நடைமுறை ஒன்றை கொண்டுவரவேண்டும். அதாவது வடகிழக்கில் உள்ள சகல அரச நிறுவனங்களிலும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் ஊடக பேச்சாளர்களை நியமிக்கவேண்டும். அப்போது உத்தியோகபூர்வமான உண்மைச் செய்திகள் மக்களைச் சென்றடையும். அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினது பொய்பிரச்சாரங்கள் வெறுமனே காற்றில் பறக்கும்.
0 comments :
Post a Comment