இறுதி டெஸ்ட் போட்டி:ஷேவாக், டெண்டுல்கர் வந்த வேகத்திலேயே அவுட்!
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நடைபெற்று வரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 87 ரன்களை பெற்றிருந்தது.இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய போது இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களை எடுத்தது. பீட்டர்சன், ரூட் தலா 73ஓட்டங்களையும், ப்ரியொர் 57 ஓட்டங்களையும், ஸ்வான் 56 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் சாவ்லா 4 விக்கெட்டுக்களையும் ஷர்மா 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி சார்பில் ஷேவாக் மூன்றாவது பந்திலேயே போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கௌதம் கம்பீர், புஜாரா ஆகியோர் சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும், 26 ரன்கள் பெற்றிருந்த போது புஜாரா ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சச்சின் 2 ரன்கள் பெற்றிருந்த போது ஆண்டர்சனின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். கௌதம் கம்பீர் 37 ரன்கள் பெற்றிருந்த போது ஆண்டர்சனின் பந்துவீச்சில் பிரியொரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து தற்போது களத்தில் விராத் கோலி 11 ரன்களுடனும், தோனி 8 ரன்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். பந்துவீச்சில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுக்களையும் ஸ்வான் 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் தொடரவிருக்கிறது.
0 comments :
Post a Comment