தமது உணவுகளுக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என இந்திய மெக்டானல்ட், பெப்சி கோ நிறுவனங்கள் உடனடி மறுப்பு வெளியிட்டுள்ளன.FDI மீதான நேற்றைய மக்களவை விவாதத்தின் போது எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மெக்டானல்ட், பெப்சிகோ நிறுவனங்கள் தமது உணவுகளுக்கான கிழங்குகளை கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இதை மறுத்துள்ள மெக்டானல்ட் நிறுவனம், தமது உணவுகளுக்கான அனைத்து மூலப்பொருட்களும் இந்தியாவில் உள்நாட்டிலிருந்தே பெறப்படுவதாகவும், மத்திய அரசுடன் இது தொடர்பில் உடன்பாடு மேற்கொண்ட பின்னரே தமது வர்த்தகத்தை இந்தியாவில் விரிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. French Fries இலும் இந்திய கிழங்குகளே பயன்படுத்தப்படுவதாக மெக்டானல்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் விக்ரம் பாக்ஷி தெரிவித்தார்.
எப்போதாவது உள்ளூரிலிருந்து மூலப்பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டால் மிக அரிதாகவே இறக்குமதி செய்கிறோம். மற்றும்படி உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்தும், உள்ளூர் விவசாயிகளிடமிருந்துமே அனைத்து மூலப்பொருட்களையும் பெறுகிறோம் என அவர் கூறியுள்ளார்.
வெவ்வேறு வகையான கிழங்குகளை உற்பத்தி செய்வதற்கு இந்திய விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று பெப்சி கோ நிறுவனமும், தமது அனைத்து மூலப்பொருட்களையும் உள்ளூரிலிருந்தே பெறுவதாக தெரிவித்துள்ளது.
நேற்றைய விவாதத்தின் போது வால்மார்ட் நிறுவனம் பற்றிய சர்ச்சையும் எழுந்திருந்தது. திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், வால்மார்ட்டின் 82% வீத பொருட்கள் சீனாவின் உற்பத்தி எனவும், வால்மார்ட்டை அனுமதித்தால் அது சீனாவுக்கு தான் நன்மை பயக்கும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment