இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.நான்காவது விக்கெட்டுக்காக இயென் பெல், ஜோனதான் ட்ரோட் இணைந்து எடுத்த 208 ஓட்டங்கள் இங்கிலாந்து இப்போட்டியை சமநிலைப்படுத்த உதவி செய்தது. இதன் மூலம், 1984-85 தொடரின் பின்னர், இந்தியா சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் முதன் முறையாக டெஸ்ட் தொடர் ஒன்றை தோற்றுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களையும், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ஓட்டங்களையும் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 4 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்களை எடுத்தது. ட்ரோட் 143 ஓட்டங்களையும் இயென் பெல் 116 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் அஷ்வின் 2 விக்கெட்டுக்களையும் ஓஜா, ஜடேயா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர். ஏற்கனவே இரண்டாவதும், மூன்றாவதும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததாலும், இப்போட்டி சமநிலையில் முடிந்ததாலும் தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
இந்தியா 8 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழந்த போட்டியாகவும் இது பதிவாகியுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்திருந்தது. அதற்கு பழிவாங்கும் முகமாக இத்தொடர் அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மீண்டும் இந்தியா மிக மோசமான துடுப்பாட்டத்தினால் இத்தொடரை இழந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment