Sunday, December 23, 2012

சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு!!

ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துளார். 'நான் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முடிவெடுத்துள்ளேன். உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்ததன் மூலம் எனது கனவு நிறைவேற்றப்பட்டுவிட்டது. 2015ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கு இந்திய அணி தன்னை இப்போதிருந்தே தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியமானது.' என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும், 'இந்திய அணியின் வளமான எதிர்காலத்திற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், இத்தனை வருடங்களாக தனக்கு எந்த வித விதிமுறையுமின்றி தொடர்ந்து அன்பையும், ஆதரவையும் தந்தவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும்' அவர் கூறியுள்ளார்.

டொனால்ட் பிராட்மனுக்கு அடுத்து நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த துடுப்பாட்டக்காரராக உலகளாவிய ரீதியில் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், இதுவரை விளையாடிய 463 ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களை குவித்துள்ளார். இது 44.83 எனும் சராசரியை கொண்டதாகும். 49 ஒரு நாள் சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும் அவர் பெற்றுள்ளார்.

1989ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போட்டியில் அவர் அறிமுகமாகியிருந்தார். 2006ம் ஆண்டு டுவெண்டி20 போட்டி ஒன்றில் விளையாடிய போதும், அதன் பின்னர் அப்போட்டிகளில் விளையாட ஆர்வம் செலுத்தவில்லை. இந்நிலையில் ஒரு நாள் தொடரிலிருந்தும் சச்சின் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் தொடர்ந்து இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தவுள்ளார்.

ஐந்து உலக கோப்பைகளை சச்சின் எதிர்கொண்ட போதும், பிறகு கடந்த வருடம், தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடியதன் மூலம் இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க சச்சினும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். கடந்த மார்ச் மாதம் ஆசிய கோப்பை போட்டிகளில் பங்களாதேஷுக்கு எதிராக சதமடித்த பின்னர் இதுநாள் வரை அவர் சதமேதும் அடிக்கவில்லை.

எனினும் கடந்த வருடம் உலக கோப்பை போட்டிகளின் போது அவர் இரு சதங்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 96 அரைச்சதங்களை அவர் கடந்துள்ளார்.

சச்சினுக்கு அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் ரிக்கி பாண்டிங் (13,704). அவர் அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். அடுத்ததாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் இலங்கை அணியின் சனத் ஜெயசூர்ய திகழ்கிறார். அவர் குவித்திருந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை 13,430 ஆகும்.

சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்டத்தில் மாத்திரமில்லாது பந்துவீச்சிலும் சிறந்து விளங்கினார். இதுநாள் வரை 154 ஒரு நாள் போட்டி விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கிறார். இதில் இரு தடவை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றியிருக்கிறார். இவ்வருடம் தொடக்கத்திலிருந்தே ஒருநாள் போட்டிகளில் சோபிக்க தவறினார் சச்சின் டெண்டுல்கர்.

இது அவர் மீது விமர்சனங்களை கொண்டு வந்தது. இந்நிலையில் அவர் ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது உலகளாவிய ரீதியில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒருவித சோக உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. சச்சினின் தலைசிறந்த ஆட்டத்தை இனி நேரடியாக கண்டுகொள்ள முடியாது என்பதால் இச்சோகம் பரவியிருக்கலாம்.

No comments:

Post a Comment