கிளிநொச்சியிலும் கடும் மழை,ஆயிரத்து 863 குடும்பங்கள் பாதிப்பு,குளங்கள் வான் பாய்கிறது
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ; குளங்கள் பெருக்கெடுத்துள்ளதோடு,கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1,863 குடும்பங்களைச் சேர்ந்த 7,042 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 921 குடும்பங்களைச் சேர்ந்த 3,330 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் 22 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரசே செயலாளர் பிரிவில் பன்னங்கண்டி, சிவிச்சென்ரர், மருத நகர், அம்பாள் நகர், இரத்தினபுரம், தொண்டமான் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை, புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம், தர்மபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, பெரியகுளம், புண்ணைநீராவி, குமாரசாமிபுரம், பரந்தன், கோரக்கன்கட்டு, ஊரியான், கண்டாவளை, பிரமனந்தனாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுமே இவ்வாறு மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிவரையான நிலைவரப்படி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 33 அடி 10.5 அங்குலம்வரை உயர்வடைந்துள்ளது. இக்குளத்தின் 11 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களான அக்கராயன்குளம், கல்மடுக்குளம், பிரமானந்தன்குளம், புதுமுறிப்புக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகவடுவான்குளம், குடமுறுட்டி குளம் ஆகிய குளங்கள் தொடர்ந்து வான்பாய்ந்துகொண்டிருக்கின்றன.
0 comments :
Post a Comment