இங்கிலாந்துடனான 7வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி!!
நேற்று இங்கிலாந்துடனான 3 வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோற்றதை தொடர்ந்து, இந்திய அணி மீதான அதிருப்தி மீண்டும் அதிகரித்துள்ளது.காரணம் இங்கிலாந்துடன் இந்தியா விளையாடிய கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் 6 இல் தோல்வி அடைந்திருக்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் எதிர்காலம் பற்றியும், தெரிவுக்குழு முடிவுகள் பற்றியும் முன்னாள் கேப்டன்கள் இப்படி சொல்கிறார்கள்.
'சஹீர் கான் இறுதி டெஸ்ட்டிலிருந்து நீக்கப்படுவார் என ஏற்கனவே எதிர்பார்த்தேன். ஆனால், யுவராஜ் சிங், ஹர்பஜன் பெயர்கள் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்' என்கிறார் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர்.
மும்பை டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங் 20 ஓவர்களுக்கு மேல் சிறப்பாக பந்து வீசினார். இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். அதே போன்று யுவராஜ் 30 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். மும்பை டெஸ்ட்டில் இந்தியா தோற்றதற்கு அணியின் ஒட்டு மொத்த தவறே காரணம். ஆனால் யுவராஜ்யையும், ஹர்பஜன் சிங்கையும் மட்டும் அணியிலிருந்து நீக்குவது என்றால், ஏன் அவர்களை விட மோசமாக விளையாடியவர்கள் நீக்கப்படவில்லை.
இந்திய அணியின் தெரிவுக்குழு தலைவர் சந்தீப் பட்டேல் நேரடியாக டிரெஸிங் ரூமுக்கு சென்று, மோசமாக விளையாடிய வீரர்களுடனும், பந்துவீச்சாளர்களுடனும் நேரில் பேசியிருக்க வேண்டும். உண்மையில் இந்திய வீரர்களுக்கு தோல்வி அவர்களை நோகடித்திருக்க வேண்டும். ஆனால், நமது வீரர்கள் தமக்கிடையே கேலி செய்துகொன்டு ஒன்றும் நடவாது போன்று காற்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இது நல்ல பண்பல்ல என அவர் மேலும் கூறுகிறார்.
இறுதி டெஸ்ட்டுக்கு பர்விந்தர் அவானா இணைக்கப்பட்டிருப்பது பற்றி கவாஸ்கர் கூறுகையில், அவானாவின் உள்ளூர் திறன் எனக்கு தெரியவில்லை. அதில் நன்றாக விளையாடியிருந்தால் அவர் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஐபிஎல் திறமைகள் அடிப்படையில் இந்திய தேசிய அணிக்கு வீரர்களை தெரிவு செய்யக்கூடாது. தோனியின் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்புவது நியாயம்ல்லை. அவருக்கு மாற்றீடாக தற்போது அணியில் யாரும் இல்லை என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும், தோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு தோனி சிறந்த கேப்டன் அல்ல. இந்தியா புதிய டெஸ்ட் அணியொன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உண்டு. தோனியிடம் இது பற்றி ஆறுதலாம அமர்ந்திருந்து பேசவேண்டும். அவருக்கு என்ன வகையான ஃபோர்மட்டில் கேப்டன்ஷிப் வேண்டுமென பேசவேண்டும்.
இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியால் நிறைய நன்மையுண்டு. ஆனால், இப்போதைய நிலமையில், அவர் கேப்டனாக தொடர்ந்தால், ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக தோனியை இழக்க வேண்டி வரும் என்றார்.
சச்சின் பற்றி கருத்து கூறுகையில், ஒரு சிறந்த துடுப்பாட்ட காரராக சச்சினை பார்ப்பவர்களுக்கு, சச்சின் ஏதாவது செய்ய வேண்டும். இப்படி மோசமான ஃபோர்மில் தொடரக்கூடாது என்றார்.
மற்றுமொரு முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவிக்கையில், தோனிக்கு மாற்றீடாக இப்போது யாரை நியமிக்க முடியும்? என்னால் ஒருவரையும் காண முடியவில்லை. விராத் கோலியை சொல்லலாம். ஆனால், அவர் கூட இப்போது ரன்கள் எடுப்பதாக தெரியவில்லை. யாரையும் இப்போது அணியிலிருந்து தூக்க கூடாது. மாறாக தெரிவுக்குழுவினர் நேரடியாக வீரர்களுடன் ஆறுதலாக அமர்ந்திருந்து பேசவேண்டும்.
தெரிவுக்குழுவினர் அவர்களது திட்டத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டும். மறைக்க கூடாது. இல்லையேல் வதந்திகளே அதிகம் பரவுகின்றன. இது நாட்டுக்கும், எமது அணிக்கும் நல்லதல்ல என்றார்.
0 comments :
Post a Comment