Monday, December 24, 2012

காலநிலை மாற்றம் 43 பேர் பலி பல்லாயிரம் பேர் பாதிப்பு

மழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக நாட்டிலுள்ள 18 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 43பேர் உயிரிழந்துள்ளதுடன்,மாவட்டங்களிலுள்ள குளங்கள் நிரம்பி வழிவதுடன் பாரிய குளங்கள், நீர்த் தேங்கங்களின் வான்களும் திறக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி உள்ளிட்ட முக்கிய கங்கைகளும் பெருக்கெடுத்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார்.

வெள்ளம்- மண் சரிவு காரணமாக நாட்டில் 70864 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 62091 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 5025 குடும்பங்களைச் சேர்ந்த 17168 பேர் 128 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் இவ் வெள்ளம் மண் சரிவு காரணமாக நேற்று வரையும் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காணாமல் போயுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்ட துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவென இதுவரையும் 115 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்கிருந்து 51643 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 92015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 609 குடும்பங்களைச் சேர்ந்த 2226 பேர் 13 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் 3128 குடும்பங்களைச் சேர்ந்த 11285 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 4082 பேர் 24 நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதுடன் நுவரெலியா மாவட்டத்தில் 3311 குடும்பங்களைச் சேர்ந்த 11890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1261 குடும்பங்களைச் சேர்ந்த 4301 பேர் 27 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment