நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 34,150 குடும்பங்களைச் சேர்ந்த 135,640 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதுவரையில் 12,453 குடும்பங்களைச் சேர்ந்த 49,993 பேர் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கடும் மழையினால் 10,971 குடும்பங்களைச் சேர்ந்த 46,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 166 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 43 வீடுகள் முழுமையாகவும் 123 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
மேலும் பெய்துவரும் கடும் மழையால் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா, நாவற்காடு, அக்கரைப்பற்று 08, சின்னக்குளம் ஆகிய தாழ்நிலப் பகுதிகளே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
No comments:
Post a Comment