Thursday, December 20, 2012

சீரற்ற கால நிலையால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு மீட்பு பணியில் பொலிஸாருடன் முப் படையினரும்

சீரற்ற கால நிலையால் நாட்டின் பல பாகங்களிலும் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற இயற்கை அசம்பாவிதங்களால் இதுவரையில் 16பேர் உயிரிழந்துள்ளதுடன் 14பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், 175,558 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது..

இந்நிலையில், கண்டி – பதுளை வீதி, பதியபல – வலப்பனை வீதி, புத்தளம் - சிலாபம் பிரதான வீதி, நுவரெலியா – செங்கலடி ஏ5 வீதி, பொத்துவில் - பாணம வீதி மற்றும் நுவரெலியா – வெலிமட வீதி ஆகியவற்றில் வெள்ளநீர் நிறைந்துள்ளதாலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினாலும் குறித்த வீதிகளினூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் மூடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த வீதிகளை வழமைக்கு கொண்டுவரும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த காலநிலை சீர்கேடு காரணமாக 15ஆயிரம் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.

கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட லலுகல, பொத்துவில், பாணம மற்றும் எலபட போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் கூறியது.

இதுவரையில், 146 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 805 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதித் தலைவர் சரத் லால் குமார தெரிவித்தார்.

இதுதவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் காரணமாக ரயில் போக்குவரத்துச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக தபால் ரயில் சேவை, கொழும்பு – ஓமந்தைக்கு இடையிலான ரஜரட்ட ரஜினி ரயில் சேவை என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன

சிலாபத்தில் பெய்துவரும் கடும் மழையினால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த நகரத்தில் வெள்ள நீரின் மட்டம் 4 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ள நீரின் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான பஸ்நிலையமும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com