Friday, December 21, 2012

16 மாவட்டங்களிலும் 3 லட்சத்து 14,916 பேர் பாதிப்பு- உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையினாலும் வெள்ளத்தினாலும் நாடளாவிய ரீதியில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 80,534 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்து 14,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.இவர்கள் அனைவரும் அடைமழை,வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களினால் 27 பேர் பலியானதுடன் 14 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி 2412 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 337 வீடுகள் முழுமையாகவும் 2075 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் 5281 குடும்பங்களைச்சேர்ந்த 18,845 பேர் 102 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை செய்துக்கொடுக்கும் நடவடிக்கைகள் 95 வீதம் முறையாக நடைபெறுவதாகவும் 5 வீத குறைபாடுகள் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

அமைச்சிலும் அதன் கீழுள்ள சகல நிறுவனங்களிலும் கடமையாற்றும் அதிகாரிகளின் விடுமுறைகள் யாவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment