மண்சரிவினால் 13 இற்கும் அதிகமானவர்கள் பலி- பல இடங்களில் வீதிப் போக்குவரத்தும் ஸ்தம்பிதம்
அசாதாரண சூழ் நிலை காரணமாக நாட்டில் இடம்பெற்ற மண்சரிவுகளில் இதுவரையில் பதின்மூன்றிற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதோடு பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு பல வீதிகளும் முற்றாக செயலிழந்து காணப்படுகின்றன..
மாத்தளை, ரத்தோட்டை நிக்கோலய மலையில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. அந்த வீடுகளுக்குள் ஆகக்குறைந்தது 10 பேர் சிக்குண்டிருக்கலாம் என மாத்தளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சிக்குண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோரை மீட்கும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இயற்கை அனர்த்தங்களினால் மாத்தளையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர இதுவரையில் இயற்கை அனர்த்தங்களினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 வரையும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மாத்தளை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தை பொறுத்தவரையில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1528 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலகத் தகவல்கள் nதிவிக்கின்றன.
கண்டி - மஹியங்கனை உடதும்பர எனமல் பொத்த எனுமிடத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது மண்திட்டுசரிந்து விழுந்ததில் அதில் பயணித்த இருவர் மண்ணுக்குள் புதையுண்டு பலியாகியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவில் சிக்குண்ட இந்த முச்சக்கரவண்டி சுமார் 250 மீற்றர் பள்ளத்திற்கு இழுத்துசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பசறை, கோணக்கல எனுமிடத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
வீட்டின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததிலேயே தந்தை மற்றும் அவருடைய குழந்தைகள் இருவரும் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர கொழும்பு – பதுளை பிரதான வீதி, பேரகல, ஹப்புத்தளையில் இன்று முற்பகல் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வீதியினூடாகப் பயணத்தை மேற்கொள்ள உள்ளவர்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment