12 மார்கழி 1986 : வரலாற்றில் கறை படிந்த நாட்கள் - தோழர் -சுகு-
இன்று தான் ஈபிஆர்எல்எப் புலிகளால் தடைசெய்யப்பட்டது.1986 ஏப்பிரலில் ரெலோ பின்னர் புளொட் , என்எல்எப்ரி பிஎல்எப்ரி, என்று தடைசெய்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் சுதந்திரமான ஸ்தாபனங்களின் செயற்பாடுகளை முடக்கினார்கள். தமிழ் பாசிசத்தின் ஒரு முக்கிய காலகட்டமே இது. வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் வெவ்வேறு கட்சிகளின் இருப்பு நிராகரிக்கப்பட்டது.
இது வெறுமனே வெவ்வேறு கட்சிகள் தலைவர்கள் என்பதனுடன் நிற்கவில்லை. சக சமூகங்கள் ,அண்டைநாட்டின் தலைவர் என விரிந்தது. இந்த “வரலாற்று விபரீதங்கள்” தான் பிரதானமாக தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்தது.
வரலாற்றில் இழைக்கப்படும் பாரதூரமான தவறுகளுக்கு என்றோ ஒரு நாள் விலை செலுத்தவேண்டியே வரும். அது நிகழ்ந்தது. மாற்று கட்சியினரும், தலைவர்களும், சக சமூகங்களும், கவிஞர்கள் மனித உரிமைவாதிகள், முற்போக்காளர்கள் உடல்மீதியின்றி அழிக்கப்பட்டது மாத்திரமல்ல, தலைமறைவாகுவதற்கும, இடம்பெயர்வதற்கும் புலம் பெயர்வதற்கும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
இன்று தலைமையில்லாத சமூகமாக ஊடகங்கள் இல்லாத பிரச்சார சாதனங்கள்(ஊதுகுழல்கள்) மிஞ்சிய சமூகமாக மாறியதன் பிரதான காரணம் இதுதான்.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் -பாரதி இதுதான் நிகழ்ந்தது.
சமூகம் பற்றிய எழிலார்ந்த கனவுகளுடன் புறப்பட்டவர்கள் மானிட விடியலைக்கனவு கண்டவர்கள் கேட்பாரின்றி தெருக்களிலும், வீடுகளிலும், சித்திரவதைக் கூடங்களிலும் கொல்லப்பட்டார்கள். வதை முகாம்களில் வாடினார்கள்.
பேரினவாதம் பற்றி என்ன குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ பல சந்தர்ப்பங்களில் அதையெல்லாம் விஞ்சியதாக புலிப்பாசிசத்தின் செயற்பாடுகள் அமைந்தன. வெவ்வேறு கருத்துக்கள் வெவ்வேறு இயக்கங்கள் இருக்கக் கூடாது. மாற்றுகளுக்கான எந்த இடைவெளியும் இல்லை என்ற நிலை எமது சமூகவாழ்வை காட்டுமிராண்டி நிலைக்கு தள்ளியது.
ஆனால் இந்த சகோதரப்படுகொலைகள் ஒரு சமூகத்தின் அழிவில் பிரதான காரணிகளாக இருந்தன என்பதை இன்றைய அற எழுத்து விற்பன்னர்கள்?? எவரும் மூச்சு கூட விடுவதில்லை. பாசிசத்தை நியாயப்படுத்துவதற்கு “எல்லாரும் தான் பிழைவிட்டவை” என குணாம்ச ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பெருநாசம் விளைவித்த ஒன்றுக்கு இவர்கள் நியாயம் சொல்வார்கள். ஏதோ ஒரு சில தவறுகள் தான் நடந்தன என சப்பை கட்டுவார்கள். அதுவும் சரி செய்யப்பட்டிருந்தால் எல்லாம் நேர்த்தியாக இருந்திருக்கும் என்பதுபோல் எழுதுவார்கள்- “நெஞ்சில் உரனும் இன்றி நேர்மை சிறிதும் இன்றி”-பாரதி
இந்த சமூகத்தில் மாற்றதிற்காக நின்றவர்கள் பிரதானமாக தமிழ் பாசிசத்தால் அழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.
மீண்டும் மீண்டும் பாசிசத்தின் நிழலில் சமூகத்தை நிறுத்துவதற்கு முனைபவர்கள் இன்றும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்க்ள். பௌத்த சிங்கள மேலாண்மை வாத சக்திகளும் அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றன.
இராணுவ பிரசன்னமும் , ஆத்திரமூட்டலும் ஒரு நெருக்கடியான நிலையை நோக்கி சமூகத்தை இட்டுச் செல்லும் போக்கு பரவலாக அப்பட்டமாக காணப்படுகிறது. இந்த சமூகத்தில் சிறந்தவை எல்லாவற்றையும் , உன்னதமானவை எல்லாவற்றையும் அழித்ததில் தமிழ் பாசிசத்திற்கு பங்குண்டு என்பதை நாம் மனதில் இருத்தியாகவேண்டும்.
இன்று நிகழும் அநியாயங்களுக்கு மாற்றாக அது இருக்கமுடியாது. அது சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக இருக்கும். பேரழிவுகளுக்கும் , தமிழ் சமூகம் எதையுமே பெறமுடியாமல் போனதற்கும் தமிழ் போராட்டம் ஒரு சிதைவியக்கமாக மாறியதற்கும் இந்த தமிழ் பாசிசம் பங்களித்தது என்பதே யதார்த்தம்.
கடந்தகாலம் நிதானமாக பாரபட்சமின்றி ஆராயப்படவேண்டும்.
துரோகம் பற்றி பேசுபவர்கள் புலிகளைத் தவிர்ந்த அனனத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகளுக்கும் துரோகப்பட்டம் சூட்டுவார்கள் . ஆனால் இன்று வாழும் புலிகளின் பிரதான தலைவர்கள் உறுப்பினர்கள் கணிசமானோர் எங்கு நிற்கிறார்கள் என்பது பற்றி மூச்சு விடுவதில்லை. இந்த சகோதரப்படுகொலைகளில் உடல்மீதியின்றி அழிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் மிகப் பெறுமதி வாய்ந்த மனிதர்கள்.
ஜனநாயக உணர்வு கொண்ட முற்போக்கான பிரிவு தேடித்தேடி அழிக்கப்பட்டது. இந்த மனிதர்களின் இழப்பு சமூகத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதே உண்மை. இன்று இனப்பிரச்சனைக்கு தீர்வு , இராணுவமயமாக்கலுக்கெதிராக அஹிம்சை வழியில் எதிர்ப்பியக்கம் நடத்துவதற்கு கூட ஆட்களை கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கிறது.
எமது சமூகத்தில் நிலவும் பெரிய பிரச்சனை என்னவென்றால் உண்மையை பேசவோ உண்மையை கண்டறியவோ விருப்பமில்லாமல் இருப்பது. சிங்களபேரினவாதம் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையெல்லாம் எவ்வாறு “பயங்கரவாதம்” என்ற ஒற்றை சொல்லால் மூடி மறைக்க முயலுகிறதோ “துரோகம்” என்ற ஒற்றைச் சொல்லினால் தமிழ் பாசிசம் தனது அநியாயங்களுக்கெல்லாம் நியாயம் சொன்னது, சொல்லிக் கொண்டிருக்கிறது.
மாற்று இயக்கங்கள் தவறிழைக்கவே இல்லை என்று கூறிவிடமுடியாது..
தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அது பாசிசமாக இருக்கவில்லை.
முட்டிமோதலுடன் பேசுவதற்கான இடைவெளி இருந்திருந்தால் இயக்கங்கள் உருப்படியாக சில காரியங்களை மக்கள் சார்பாக ஒப்பேற்றியிருக்க முடியும். பாசிசம் உலகில் வேறு இடங்களில் நிகழ்ந்ததைப்போலவே பாரிய சமூக அனர்த்தத்திற்கு வழி வகுத்தது. நாம் தனிப்பட்ட மனிதர்களை இங்கு குறிபிபடவில்லை. ஒரு மனித குலவிரோத கருத்தியல் பற்றியே !!
இது 80 களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அது சமூக ஜனநாயகத்திற்கும், முன்னோக்கிய இயக்கத்தின் மீதும் பாரிய அனர்த்தங்களை விளைவித்தது. உண்மையின் வெளிச்சத்தில் நாம் முன் செல்ல வேண்டும். பாசிசத்தை சமூகத்தினுள் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் சமூகத்தை மீண்டும் பேரழிவைநோக்கியே இட்டுச்செல்லும் .
சமூக நல்லெண்ணமும் ,அற உணர்வுகள் மேலோங்குவதற்குமான இடைவெளி அதிகரிக்க வேண்டும். சமூக ஜனநாயக சத்திகள் நெருக்கமாக இணைந்து செயற்படவேண்டும்
2 comments :
Those days LTTE'S discipline was far better than all our organizations.You didn't even show a good sign during IPKF time. People suffered a lot by all of you that's why they accept LTTE. You all have to sit and reveiw why you all haven;t won peoples'HEARTS and failed to maintain discipline among YOUR MEMBERS. You all have too accept the discipline of LTTE's early times.
இந்த கிறுக்கன் இன்னமும் அரசியலில் இருக்கின்றனா ? இவன் கட்சியும் கைவிட்டு TNA யும் காலால் உதைத்தும் நடு ரோட்டில் நிற்பதாக சொல்லித் திரிந்த இந்த பிறவி ஏன் தன இப்படி அறிக்கை அரசியல் செய்கின்றதோ ? தன சகாக்களை கொல்வதுக்கு துணை புரிந்த TNAயின் காலில் விழுந்து பிச்சை எடுப்பதை விட வேறு நல்ல உருப்படியான வேலை எதையாவது செய்யலாம்.
செந்தா சுவிஸ்
Post a Comment