இந்திய அணிக்கு எப்போதையும் விட இப்போது தான் சச்சின் டெண்டுல்கர் மிக அவசியமாக தேவைப்படுகிறார்.
இந்திய அணி எதிர்நோக்கியுள்ள இந்நெருக்கடியான காலகட்டத்தில் அவரை போன்று ஓர் அனுபவ வீரர் அணியில் இருப்பது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடரை தொடர்ந்து இங்கிலாந்துடனான தொடரிலும் சச்சின் மோசமான துடுப்பாட்டத்தையே தொடர்கிறார். இதையடுத்து அவர் ஓய்வு பெறவேண்டிய தருணம் வந்துவிட்டது என மீண்டும் ஊடகங்களில் பேச்சடிபட்டு வருகிறது.
பிசிசிஐயின் தெரிவுக்குழு கமிட்டி, இது தொடர்பில் வெளிப்படையாக சச்சினிடம் பேசவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் டிராவிட் சச்சினுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். இங்கிலாந்துடனான டெஸ்ட்டுக்கு சச்சின் தன்னை முழுமையாக தயார் செய்திருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக அவர் மீண்டும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார்.
ஆனால் இந்திய அணி இப்போது இக்கட்டான நிலையில் இருக்கும் போது சச்சின் போன்ற அனுபவம் மிக்க வீரர் இருப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இனிவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் மோசமான துடுப்பாட்டத்தை தொடர்ந்தால் பிசிசிஐ நிர்வாகிகள் அவருடன் நேரடியாக இது தொடர்பில் பேசவுள்ளதாகவும் சச்சினுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயினும் டெண்டுல்கரின் அண்மைய மோசமான துடுப்பாட்டங்கள் தொடர்பில் பிசிசிஐ இன்னும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் ஃபோர்முக்கு வருவார் என பிசிசிஐ நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிச.5ம் திகதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment