Friday, November 9, 2012

வெலிக்கடைச் சிறையைச் சுற்றி இராணுவம் குவிப்பு -கைதிகள்-பாதுகாப்பு தரப்பு தொடர்ந்தும் சண்டை

வெலிக்கடைச் சிறையில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்தினர் முயன்றுவரும் அதேவேளை, சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரும் பொருட்டு இராணுவத்தினர் தலைமையில் விசேட முன்னெடுப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இராணுவத்தினரின் கவச வாகனங்களும் சிறைச்சாலை வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்துடன் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்தே இந்த விசேட முன்னெடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த 12 பேரின் சடலங்கள் இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரையில் 35பேர் வரையில் இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்






இச்சம்பவங்களுக்கிடையில் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸ் விசேட அதிரப்படையினரால் சுட்டில் உயிரிழந்துள்ளார். காயங்களுக்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெற்றுவரும் சண்டைகளுக்கு மத்தியில் சிறைச்சாலையின் உள்ளே பலர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உள்ளனர்.

இறுதியாக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளை கட்டுப்படுத்தி நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்காக இராணுவத்தின் தலைமையில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படவிருந்த முன்னெடுப்பு நடவடிக்கை மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்ற போதும் இதனை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.

அத்துடன், சில நிமிடங்களுக்கு முன்னரும் மீண்டும் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டுடன் கூடிய சண்டை ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com