நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டைவர்ஸ்
தற்போதைய அவசர உலகில், திருமணமான மூன்றே மாதத்தில், மனக்கசப்பு ஏற்பட்டு, டைவர்ஸ் கேட்டு நீதிமன்ற வாசலை மிதிக்கும், தம்பதியரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருமணத்தின் போது, ஆண்களுக்கு, 21, பெண்களுக்கு, 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்துகிறது. தற்போதைய, அவசர உலகில், இளம் திருமணம், காதல் திருமணம் போன்றவையே அதிகரித்து காணப்படுகிறது.
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது, குறைந்து வருகிறது. நன்கு விசாரித்து, வரனை தேர்ந்தெடுத்து செய்யும் திருமணங்கள் நிலைத்து நிற்கின்றன.
இணையதளங்களை நம்பி துணையை தேர்வு செய்யும்போது, பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. சரியான புரிந்துணர்வு இல்லாததால், திருமணமான ஒரு சில மாதங்களில், தம்பதிகளுக்கு இடையே மனக்கசப்பு உருவாகிறது.
ஆணுக்கு நிகராக பெண்களும், தங்களை மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும் வளர்த்து வருவதால், திருமண முறிவைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரம் மாறி, வெளிநாட்டு மோகம் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால், கணவன், மனைவிக்கு இடையே சிறு பிரச்னை என, வந்து விட்டால், நீதிமன்ற படியேறுகின்றனர். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகமாக டைவர்ஸ் கேட்டு விண்ணப்பிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
சிலர், டைவர்ஸ் கேட்டு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விட்டு, இணையதளங்களில் உலாவும் மேட்ரிமனி டாட் காம்களை நாடுகின்றனர். 2,000 முதல், 3,000 ரூபாய் என குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், தங்களுக்கு வேண்டிய ஆணானாலும், பெண்ணானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என, பலவித கவர்ச்சி விளம்பரங்களை அறிவிக்கின்றனர்.
பணத்தை செலுத்தி, மனதுக்கு பிடித்த நபர்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அவர்களுடைய பின்னணி விபரங்களை கேட்டறிவதை தவிர்க்கின்றனர்.
இதனால், ஏற்கனவே திருமணமானவர்கள், டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்கள், மீண்டும் ஒரு கல்யாணத்துக்கு தயாராகின்றனர். பெரும்பாலும், ஒரே மாவட்டத்தில் பார்ப்பதை விட, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களை தேர்வு செய்வதில் தான், அதிக அக்கறை காட்டுகின்றனர்.
இந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்ட விதிகளின்படி, ஆணோ, பெண்ணோ, ஒருவரை விட்டு முழுமையாக பிரிந்து விட்டதற்கான, நீதிமன்ற உத்தரவை சமர்ப்பித்தால் மட்டுமே, மறு திருமணத்துக்கு தகுதியானவர்.
அவ்வாறு சமர்ப்பிக்காமல், திருமணம் செய்தால், சட்டப்படி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வழி உள்ளது.
பாரத் மேட்ரிமனி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எங்களுடைய மேட்ரிமனியில், மணமகன், மணமகள் பதிவு விண்ணப்பத்தில், திருமணமானவரா, டைவர்ஸ் அப்ளை செய்துள்ளாரா என்பது போன்றவை குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்போம். அதனடிப்படையில் பதிவு செய்யப்படும்.
அவ்வாறு, வரன் தேர்வு செய்பவர்கள், நேரடியாக சென்று விசாரணை செய்து, வரன்களை தேர்வு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
சம்மந்தப்பட்டவரின் மொபைல் நம்பரை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ளுங்கள். டைவர்ஸ் அப்ளை செய்து விட்டு, மேட்ரிமனியில் பதிவு செய்வது தவறானது. இதன் மூலம், அந்த நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.
வரன் தேர்வு செய்வோர், ஆண், பெண் யாராக இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர் பதிவு செய்த விபரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால், அவற்றை ஒதுக்கி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment