என் தாய்க்கு சொல்லி விட்டீர்களா? தூக்கில் தொங்கிய மும்பை தீவிரவாதியின் கடைசி நிமிடங்கள்
என் தாய்க்கு சொல்லி விட்டீர்களா என்று மும்பை தீவிரவாதி கசாப் தனது தூக்கு மேடைக்கு செல்லும் போது இறுதியாக் கேட்டான். ஆம் என்று சிறை அதிகாரிகள் அதிகாரிகள் தலையசைத்தனர். தீவிரவாதியாக இருந்தாலும் கடைசியான அவனது நிமிடங்கள் கண்களை கலங்கத்தான் வைக்கின்றன.மறைக்கப்பட்ட கசாப்பின் இறுதி நிமிடங்களை உங்களுக்காக கொண்டு வருகின்றோம்.
கசாப் அனுப்பிய கருணை மனுவை கடந்த 5ம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து, உள்துறை அமைச்சகத்துக்கு பைலை அனுப்பினார். வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பிய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, 8 ம் தேதி காலை பைலை பார்த்து உடனே கையெழுத்திட்டு, மகாராஷ்டிர அரசுக்கு அனுப்பினார்.
மகாராஷ்டிர அரசு ஆலோசித்து,நவ.20, 21 திகதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நாள் தூக்கு நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தது.
ஆர்தர் ரோடு சிறையில் கடந்த திங்கள் கிழமை காலை முதலே பரபரப்பு அதிகரித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவிர யாருக்கும் விவரம் தெரியவில்லை. அன்று இரவு 9 மணிக்கு கசாப் தூக்கு நடவடிக்கைக்கு ஆபரேஷன் எக்ஸ் என பெயரிடப்பட்டது.
யார் யார் கசாப்பை அழைத்து செல்லும் பயணத்தில் பங்கேற்பது என்பதை மும்பை போலீஸ் கமிஷனர் முடிவு செய்தார். அதன்படி, ஆறு வாகனங்களில் அதிரடிப்படையினர் உட்பட 17அதிகாரிகள் கசாப்பை பாதுகாப்பாக அழைத்துச்செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
நள்ளிரவில் நிசப்தத்தை கிழிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 6 போலீஸ் வாகனங்கள் சீறிக் கிளம்பின. ஏதோ அவசர பார்சல் தான் செல்கிறது என்று அங்குள்ள போலீசார் நினைத்தனர்.
வழக்கமாக அந்த நேரத்தில் செல்லும் என்பதால் யாருக்கும் வித்தியாசமாக தோன்றவில்லை. 20 ம் தேதி அதிகாலை 2 மணியளவில் புனே எரவாடா சிறை வளாகத்துக்குள் ஆறு வாகனங்களும் நுழைகின்றன.3 மணி வரை நடைமுறைகள் முடிந்து,கசாப், தனிமை சிறையில் அடைக்கப்பட்டான்.
அன்று காலை 10 மணிக்கு கசாப் தூக்கிலிடப்படுவது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்துக்கு தகவல் அனுப்பபட்டது. அவர்களும் அதை பெற்றதாக பதில் தகவல் அனுப்பினர். செவ்வாய் கிழமை முழுக்க கசாப் பெரிதாக பதற்றம் காட்டவில்லை.
வழக்கமாக முணுமுணுக்கும் இந்தி சினிமா பாடல்களை பாடிக்கொண்டிருந்தான். வெளியில் இருந்து சாப்பாடு வேண்டுமா? பிரியாணி வேண்டுமா என்று போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். ஆனால், சிறை சாப்பாடு போதும் என்று கூறிவிட்டான்.
மறுநாள் புதன் அதிகாலை பான்சி யார்டு சிறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தான் தூக்கு மேடை உள்ளது. மேடை அருகே உள்ள இருட்டறையில் அவன் தங்க வைக்கப்பட்டான். காலை 5.20க்கு உயர் அதிகாரிகள் வந்தனர். தாசில்தார் ஷிர்கேயும் வந்தார்.
கசாப் அறைக்கு சில உயர் அதிகாரிகள் மட்டும் சென்றனர். ஆறு மணி அளவில் அவனுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.52 கிலோ எடை உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று அதிகாரிகள் கேட்டனர். மசாலா டீ வேண்டும் என்றான். இரண்டு டம்ளர் டீயை வாங்கி குடித்தான். இதன் பின், தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்ல நான்கு போலீசார் வந்தனர். கை, கால்கள் கட்டப்பட்டன. முகம் கறுப்பு துணியால் மூடப்பட்டது.
காலை 7.25 மணி வரை அறையிலேயே கசாப்பை காக்க வைத்தனர். அதற்குள் தடை ஆணை வருகிறதா என்று பார்க்கத்தான். அதன்பின், அவனை நான்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
தூக்கு மேடைக்கு போக சில படிகள் சாய்வாக ஏற வேண்டும். அதில் ஏறுவதற்கு போலீசார் கையை தூக்கி உதவினர்.அப்போது மட்டும், என் தாய்க்கு சொல்லி விட்டீர்களா என்று கேட்டான். ஆம் என்று அதிகாரிகள் தலையசைத்தனர். அவன் இருந்த அறையிலும், தூக்கு மேடை முன்பு அவன் வந்த பின்னும் மரண தண்டனை வாரன்ட் படிக்கப்பட்டது.
பின், அதில் தாசில்தாரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அவர்தான் இதற்கு சாட்சி.
சரியாக 7.30க்கு தூக்கு மேடை கீழே பலகை நகர்த்தப்பட்டு, கசாப் உடல் கயிற்றில் தொங்கியது. 7.45 மணி வரை கயிற்றில் தொங்கியது அவன் உடல். பின், டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.
அதன் பின் அவன் உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டது. அவன் உடலை புதைக்க, அருகேயே ஆறு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு குழியில் 9 மணிக்கு அவன் உடல் இறக்கப்பட்டது.
உள்ளூரில் இருந்து மவுல்வி ஒருவர் அழைக்கப்பட்டு, மத முறைப்படி அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தூக்கு முடிந்தபின் தான், முதல் நாள் ஷிப்டுக்கு வந்த சிறை போலீசார் அத்தனை பேரும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போய்விட்டது.
0 comments :
Post a Comment