டில்சான் சதத்தால் இலங்கை வெற்றி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே யான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 5 ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இலங்கை அணி 14 ரன்னில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையில் வெற்றி பெற்றது. இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 14 ஓவருக்குள் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 33 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது. தொடக்க வீரர் வாட்லிங் 88 பந்தில் 96 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை அணிக்கு 33 ஓவரில் 197 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தில்சானின் அதிரடியான சதத்தால் இலங்கை அணி மீண்டும் வெற்றி பெற்றது. அந்த அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்சான் 95 பந்தில் 102 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
250 ஒருநாள் போட்டியில் விளையாடும் தில்சானுக்கு இது 14-வது சதம் ஆகும். மேத்யூஸ் 54 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது போட்டி வருகிற 10-ந்தேதி ஹம்பன் டோடாவில் நடக்கிறது.
0 comments :
Post a Comment