இராமர்கள் தேடும் சீதைகள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த பெண்போராளி ஒருவருடையதென நேர்காணலொன்றை அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகை வெளியிட்டிருந்தது. அதனைப் படித்த பொழுது, யுத்தத்தின் பின்னரான சூழலில் அவர்களின் பிரச்சனை வெளிவந்ததான திருப்தியோ, அவர்களைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்ற கோபமோ உண்டாகவில்லை. மாறாக மிகுந்த அயர்ச்சியே உண்டாகியது.
நமது சமூகம் ஒன்றிணைந்து நூதனமாகக் கையாள வேண்டிய பிரச்சனையொன்று, பெண்ணுடலை அலசும் நமது இரகசிய ஆசைகளினால், நடுச் சந்தியில் அவர்களை நிர்வாணமாக்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதால் உண்டான அயர்ச்சியது.
இந்த நேர்காணலைத் தொடர்ந்து வழமை போலவே இணைய உலகம் இரண்டுபட்டது. வழமையான இணையப் போராளிகளெல்லோரும் அம்பறாத்துணிகளுடன் ‘தேசியக்காவல்’ போருக்குப் புறப்பட்டார்கள். இப்படியாக நடந்த விவாதங்களையெல்லாம் படிக்க வேண்டுமென எனக்கும் விதிக்கப்பட்டிருந்தது. விதிப்பயனாய், படித்த பொழுது, விடுதலைப்புலிகள் பற்றிய தென்னிந்திய திரைப்படமொன்றை பார்க்கும் உணர்வே உண்டானது.
இவர்களில் யாருக்குமே அந்தப்பெண் பாலியல் தொழிலாளியாகயிருக்கிறார் என்பது பிரச்சனைக்குரியதாகியிராது என்றே நினைக்கிறேன். ஏனெனில் பாலியல் தொழிலாளிகளாகயிருக்கும் வன்னிப் பொதுமக்கள், போராளிகள் பற்றிய தகவல்கள் முன்னரும் சில தடவைகள் வெளிவந்துதானிருக்கிறது. அப்பொழுதெல்லாம் நமது தேசியவீரர்கள் கடைவிழியில் வழிந்த நீரை சுண்டியெறிந்துவிட்டு, மரணித்துவிட்ட பெண் புலிகள் பற்றிய பிம்பத்தின் சடலத்தை ஊரெல்லாம் கொண்டு திரிந்து அஞ்சலிக்கூட்டம் நடத்திக் கொண்டுதானிருந்தார்கள்.
இந்த நேர்காணலையும் ஊருராக கொண்டு திரிந்து செத்தவீடு கொண்டாடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகளிருந்த போதும், ஒரேயொரு பிசகான வசனமிருந்து நூழிழையில் எல்லாவற்றையும் குழப்பிவிட்டது. அந்த வசனம் மட்டுமில்லையென்றால், தமிழ்த்தேசியத்தைக் காக்க வந்த இன்னொரு பெருந்தூண் என நேர்காணலைச் செய்தவர் கொண்டாடப்பட்டிருப்பார். போராட்டத்தில் இன்னொரு போராளி பலவந்தமாக இணைக்கப்பட்டிருப்பார். துரதிஸ்டவமாக அப்படியெதுவும் நடக்கவில்லை. ‘இன்னொருமுறை போராடமாட்டோம்’ என்ற சாரப்பட அவர் சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தது உலக அளவில் இணையப் போராளிகளை பதட்டமடைய வைத்திருந்தது.
நேர்காணல் வந்ததும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட உடனடியான மறுப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இணையப் போராளிகளினதும், சிறீதரனினதும் அறிக்கையில் தூக்கலாகத் தெரிந்த கருத்து, போராளிகள் பாலியல்தொழிலில் ஈடுபட மாட்டார்கள். அப்படியொரு நிலை வர நாம் இடமளியோம் என்பதே.
இந்த இடத்தில் நமது அரசியல்வாதிகளிடமும், செயற்பாட்டாளர்களிடமும், இணையப் போராளிகளிடமும், வாய்ச்சவடால்காரர்களிடமும் வைக்கும் தாழ்மையான விண்ணப்பமென்னவென்றால், தயவுசெய்து உங்கள் மனச்சாட்சிகளை ஒருமுறை நீங்களே கேள்வி கேட்டுப்பாருங்கள். நீங்கள் சொன்னது உண்மையா? அவர்களிற்கு உதவ உங்களிடம் என்ன செயற்றிட்டம் இருக்கிறது? இந்தப் பணிகளை முன்னெடுக்க ஏதாவது பொறிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறீர்களா? இல்லையெனில் உங்கள் உதவித்திட்டம் குறித்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தாதா? உதவிகள் பலரை சென்றடைய முடியாதல்லவா? ஏனெனில் நானறிந்த வரையில், உதவி செய்வதாகக் கூறிக் கொள்பவர்களின் எண்ணிக்கையை விடவும், உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவானது.
அறச்சீற்றம் கொண்ட நண்பர்களெல்லோரிடமும் ஒரு கோரிக்கை. அவர்களையும் நமது சக மனுசியாக பாருங்கள் என்பதே. அவர்கள் போராளிகள், தற்செயலாக தோற்றுவிட்டாலும் இப்பொழுதும் காலையில் சத்தியப்பிராமாணம் எடுத்து, அணிநடையில் திரிகிறார்கள் என்பது போன்ற பாவனைகளை உருவாக்கி உங்கள் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயலாதீர்கள்.
வாழ்வின் எந்தத் தருணங்களையும் இழக்காமல் கொண்டாடியபடி, படித்து, பட்டம்பெற்று, தொழில் பெற்று, கல்யாணமாகி பிள்ளை பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தங்களைப் போன்ற உணர்வுள்ள ஒரு மனிதப்பிறவியாகவே அவர்களையும் அணுக வேண்டும். அவர்களும் வாழ்வின் மீது எல்லாவிதமான தாகமுமுடையவர்கள். எல்லா தருணங்களையும் வாழ்ந்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். ஆகவே இந்த வாழ்க்கையை – அதனை வாழ்ந்து முடிக்க சாதாரண மனிதர்களிற்கு எப்படியான சவால்களிருக்கிறதோ, அதே சவால்களை எதிர்கொண்டபடி- வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு இந்த உலகம் எந்தவிதமான சாத்தியங்களை வழங்கியுள்ளதோ, அவற்றினூடாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேளை தவறாமல் பசியைக் கிளறும் வயிறு அவர்களிற்குமுள்ளது. ஆகவே, சமூகத்தின் எல்லா அடுக்குகளிலுமிருப்பதைப் போல, பெண் போராளிகளிலும் சிறுவீதத்தினர் பாலியல் தொழிலாளிகளாகயிருக்கிறார்கள் என்பதே உண்மை.
நாங்கள் அவர்களிற்கு எப்படியான வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம்? ‘விடுதலைப்புலி தங்கச்சி உன் வீர எழுச்சி தமிழீழப் புரட்சி’ என்று பாடியபடி, என்ன நடந்தாலும்- காற்றைக் குடித்தபடியாவது- அவர்கள் புலிகளில் இருந்தது போலவே இருப்பார்கள் என இப்பொழுதும் யாராவது கண்களை மூடிக் கொண்டிருப்பார்களெனில், நாம் தமிழர் கட்சியில் இருப்பதற்க மட்டுமே அவர்கள் லாயக்கு.
போராளிகள், பொதுமக்கள் என்ற பேதமின்றி வறுமை நிமித்தம் திசைமாறி செல்பவர்கள் பற்றிய தகவல்கள் இதற்கு முதல் வந்ததில்லையா? கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாகவே வவுனியா நகர விடுதிகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஏழைப்பெண்கள் பாலியல் தொழிலாளிகளாகயிருப்பது பற்றிய தகவல்கள் வந்து கொண்டுதானேயுள்ளன. இதனையெல்லாம் சிறீதரன் அறிந்திருக்கமாட்டார் என நம்ப முடியாது.
இந்த இடத்தில் அரசியலரங்கில் உள்ள தமிழ்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் இந்த விடயத்திலுள்ள கூட்டுப் பொறுப்பை நினைவுபடுத்த விரும்புகிறேன். நானறிந்தவரையில் தமிழ்த்தேசிய அரசியலாளர்களிற்கு மாற்றானவர்கள் எவரும் இந்த விடயத்தில் சம்மந்தப்படுவதில்லை.
‘நாங்கள் அப்பவே அப்பிடி’ என விடுதலைப்புலிகளிற்கு எதிரான அதே மனநிலையுடையவர்களாகவே இருக்கிறார்களோ தெரியவில்லை. விடுதலைப்புலிகளையோ, அவர்களது அரசியலையோ எதிர்ப்பதும், ‘திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள்’ இயல்பு வாழ்விற்கு திரும்ப உதவுவதும் வேறுவேறானவையென்ற புரிதலுமில்லையென்றால், அவர்களிற்காக இரக்கப்பட மட்டுமே முடியும். பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, ஜனநாயகம், இணக்கமான அரசியல் என்ற அவர்கள் பேச்சிற்கும் செயலிற்குமிடையிலான இடைவெளிகள் புலப்படும் புள்ளியொன்றிது.
ஆயினும், இந்த விடயத்தில் பொறுப்புணர்வோடு செயற்படுவதற்கான தார்மீகப் பொறுப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கே அதிகமாகவுள்ளது. இதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான பிரகாசமான வாய்ப்புகளுமுள்ளன. எனவே, இந்த விடயத்தில் ‘சத்தமின்றி’ உதவி செய்வதாக அவர்கள் குறிப்பிடுவதை தவிர்த்து, ‘சத்தமிட்டு’ – அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பொன்றை நிறுவி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், போரளிகள், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்களைக் கையாள வேண்டும். அரசு அதனைச் செய்யப் போவதில்லை. அந்தக் கடமையை செய்யாமல், இந்த விதமான அறிக்கைள் மூலம் விடயங்களைக் கடந்து செல்லும் அரசியலை நமது அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்.
யுத்தத்தின் பின்னர் வன்னிப் பகுதியில் பாலியல்த் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளமை பலரும் சுட்டிக்காட்டிய ஒன்றுதான். அதனை வாழ்வியல்ப் பிரச்சனையென்றளவில் அணுக வேண்டுமே தவிர, இப்பொழுதும் இலட்சியம் சார்ந்து முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்க முடியாது. பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்குத்தான் இது உதவும். தவிரவும் பலொழுக்கம் சார்ந்த விடயங்களை எந்த சிந்தாந்த, கோட்பாட்டு எல்லைகளிற்குள்ளும் கட்டுப்படுத்த முடியாதென்ற உண்மையையும் ஒத்துக்கொள்ள வேண்டும். வன்னியில் எல்லோராலும் கைவிடப்பட்ட பெண்களில் சிறு வீதத்தினரின் தெரிவு பாலியல் தொழிலாகயிருக்கின்றதென்பதே சரியாகயிருக்கும். சி.ஐ.டி வேலை பார்த்து, அவர்களின் யாரெல்லாம் போராளிகளாகயிருந்தார்கள் எனக் கண்டுபிடித்து, இழுத்து வந்து சந்தியில் நிறுத்துவது முறையல்ல. நமது அத்தியாவசியப் பணியும் அதுவல்ல. அவர்களின் வாழ்விற்கான வழிகளைத் திறந்துவிடுவதே பொருத்தமானது.
இந்த விடயத்தில் நமது சமூகம் காட்டிக் கொள்ளும் பதட்டத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வறுமை காரணமாக பெண்கள் -குறிப்பாக முன்னாள் போராளிகள்- பாலியல் தொழிலாளிகளாவது இப்பொழுதுதான் ஏற்பட்டதொன்றுமில்லை. விடுதலைப்புலிகளின் காலத்திலேயே இருந்ததுதான். விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியொன்றிலிருந்து விலகிய ஒருவர் கிளிநொச்சி நகரமையத்தில் பிரபல்யமான பாலியல்த் தொழிலாளியாகயிருந்தார். அவரும் காலொன்றை இழந்தவர்தான். சக்தி எப்.எம் என்றால்த்தான் அவரை எல்லோருக்கும் தெரியும். (சூரியன் எப்.எம் என்றும் ஒருவர் இருந்தார்)
இதனால்த்தான் இதனை வாழ்வியல் பிரச்சனையாகத்தான் நோக்க வேண்டுமென்றேன். ‘அடப்பாராடா, விடுதலைப்புலிகளின் காலத்திலும் பாலியல் தொழிலாளிகளிருந்திருக்கிறார்கள். தெரிந்திருந்தால் தோரணம் கட்டி தொங்கவிட்டிருக்கலாம்’ என்றோ, ‘மாதம் மும்மாரி பொழிந்த இராச்சியத்தில் பாலியல் தொழிலாளியா. எழுதியவன் கையை வெட்டு’ என்றோ, இந்த மனிதாபிமானப் பிரச்சனையிலும் அரசியல்ச் சேற்றையள்ள யாராது முயன்றால், அவர்களை அவர்கள் வீட்டுப் பெண்கள் செருப்பால் அடிக்கட்டும்.
பிரபாகரனின் ஆட்சியென்றாலும், ராஜபக்சவின் ஆட்சியென்றாலும் ஒரே மாதிரித்தான் பசிக்கிறது. முன்னர் வன்னியிலிருந்த சனங்களின் அடிப்படைதேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறிமுறையொன்று புலிகளிடமிருந்தது. இப்பொழுது அதில்லை. அந்த சனங்களும், அவர்களின் படையணிகளும் சிதைந்துவிட்டன. அரசிடம் இந்த அக்கறைகளில்லையென்பதுடன், வன்னியில் அதிகளவில் நிலை கொண்டுள்ள படையினரும் இந்த மோசமான சீரழிவிற்கான காரணங்களிலொன்று.
வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட பின்னர், அந்தச் சமூகமும் இப்படியான அவலத்தை எதிர் கொண்டார்கள். பிற விடுதலையியக்கங்கள் செயலற்றுப் போன சமயங்களில் அதிலிருந்த பெண்களும் இப்படியான நிலைமைக்காளானார்கள். யுத்தம் நடந்த தேசங்களிலெல்லாம் இதுதான் நடந்தது. யுத்தத்தின் அவலட்சணமான குழந்தையிது. ஆகவே இந்தப்பிரச்சனை இங்கேதான் நடக்கிறதென்றோ, அல்லது இந்த பிரச்சனை நடக்கவில்லையென்றோ சொல்ல முடியாது. இந்த யுத்தம் இதற்கான உதாரணங்களை ஏற்கனவே உண்டாக்கிக் காட்டிவிட்டது. இதற்காக தலையிலடித்து அழுது கொண்டிருப்பதோ அல்லது எதனையும் பாராமல் கண்களை மூடி, செபம் சொல்வது மாதிரி வீரபிரதாபங்களை உச்சரித்துக் கொண்டிருப்பதோ பலனற்றது.
நான் கூட ‘திரும்பி வந்தவன்’ என்றொரு கதையெழுதியிருந்தேன். வன்னியில் உருவாகும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய விடயங்கள் அதில் பேசப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தகவல் அல்லது சம்பவத்தினடிப்படையிலான படைப்பாளியின் புனைவெழுத்திற்கும் ஊடகவியலாளனின் தகவலெழுத்திற்குமிடையில் நிறைய வேறுபாடுகளுண்டு. புனைவும் உண்மையை ஆதாரமாக் கொண்டிருந்த போதும், அதில் அதிக சுதந்திரமான பிரதேசங்களுண்டு. முற்றிலும் உண்மையான சம்பவங்களினால் புனைவொன்று ஆக்கப்பட்டாலும், அனைத்து உண்மைகளும் ஒரே சம்பவத்தின் தொடர்ச்சிகளாகயிருக்க வேண்டியதில்லை. அது, அந்தக் காலத்தின் சம்பவங்களாகயிருக்கின்றனவா என்பதே முக்கியமானது. ஆனால் தகவலெழுத்தில் அந்த சுதந்திரமிருப்பதில்லை. அந்த உண்மை, சம்பவத்தின் தொடர்ச்சியாகயிருக்கின்றதா என்பதே பிரச்சனை.
இந்த நேர்காணல் இரண்டாவது வகைக்குள்- அதாவது தகவலெழுத்தாகயில்லை என்பதே இந்த பிரச்சனைகளின் அடிப்படையாகயிருக்கிறது. இந்தப்பெண் பாலியல் தொழிலாளியாகயிருக்கிறார் என்ற உண்மையின் மீது புனையப்பட்டவையாகவே, பெண்போராளிகள் கூட்டாக கற்பழிக்கப்பட்டது, அமைச்சர் அதில் கலந்து கொண்டது முதலானவையிருக்கின்றன. இலங்கை யுத்தத்தின் இறுதியில் தமிழ்ப்பெண்கள் பாலியல் கொடுமைக்காளானார்கள், கொல்லப்பட்டார்கள், தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் சரணடைந்த பின்னர் யுத்தகளத்திற்கு வெளியில் கொண்டவரப்பட்ட பின்னர் இப்படியான கூட்டான கொடுமைகள் நடைபெற்றிருக்கவில்லை. அந்த இடத்தில் இப்படிப் பலர் கொல்லப்பட்டிருக்கவில்லை. இதனால்த்தான் இந்த நேர்காணல் புனைவெழுத்தை ஒத்ததென்கிறேன்.
பெண்பொராளிகள் எல்லோரும் பாலியல்க் கொடுமைக்கு ஆளானார்கள் அல்லது பாலியல்த் தொழிலாளிகளாகயிருக்கிறார்கள் என்ற பொதுவான பார்வை உருவாகிவருகிறது. இந்தவிதமான கருத்திற்கு எதிராக தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். இதனர்த்தம் அவர்களில் யாருமே அப்படியான கொடுமையை அனுபவிக்கவில்லையென்பதல்ல. அதனைப் பொதுமைப்படுத்த முடியாதென்பதே யதார்த்தம்.
சரணடைந்தவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஒவ்வொருவருமே தத்தம் கற்பனைக்கெட்டிய எல்லைகளிற்குச் சென்று ஊகிக்கிறார்கள். எல்லோரது எல்லைக்கோடுகளுமே அடிமனதில் உறைந்துள்ள பாலியல் வக்கிரத்தைக் கடந்து நகரமுடியாமலிருப்பதைப் பார்க்கையில் மிகுந்த அயர்ச்சியாகயிருக்கிறது. ஆண்மனங்களில் படிந்துள்ள பெண்ணுடல் பற்றிய வக்கிரத்தின் எல்லைகள் சற்று முன்னப்பின்ன இருப்பதால், பிரச்சனை யாரிடம் மாட்டுப்படுகிறது என்பதிலுமிருக்கிறது.
இப்படித்தான் இறுதியுத்த காலப்பகுதியில் ஒரு கதையடிபட்டது. களத்தில் கைது செய்யப்படும், சரணடையும் பெண்போராளிகளை தமது வைத்தியாலையொன்றில் பராமரிப்பாளர்களாக இராணுவத்தினர் வைத்துள்ளார்கள் என்று. அடுத்தவாரம் கதை ‘ஆடைகளைந்து’ உலாவியது. அதாவது அந்தப் பெண்கள் இறுக்கமானதும் மிகச்சிறியதுமான காற்சட்டையும், மேல் உள்ளாடையும் மட்டுமே அணிந்து பணியாற்றுகிறார்கள் என.
சற்றே கற்பனைத்திறன் வாய்த்தவர்களின் கைகளிற்குள் இந்த விடயங்கள் சென்றால் கேட்கவும் வேண்டுமா? கிட்டத்தட்ட ‘சரோஜாதேவி’ வகை சஞ்சிகையில் இடம்பெறவல்ல ‘ஆக்கங்களை’ உற்பத்தி செய்கிறார்கள். ஆனந்த விகடனில் வெளியான நெர்காணலைப் பார்த்த பொழுது இந்த விதமான எண்ணமே உண்டானது. வீட்டில் சிவனேயென உட்கார்ந்திருக்கும் பெண்களையே ஊர் ஒதுக்குப்புறச் சுவர்களிலும், மலசலகூடங்களிலும் காண முடிகையில் இதெல்லாம் எதிர்பார்க்கக்கூடியதுதானென்ற போதும், விடுதலைக்கான செயற்பாடுகளில் தம் வாழ்நாட்களைத் தொலைத்தவர்களிற்கான குறைந்தபட்ச மரியதையையாவது கொடுப்பதற்காக இது போன்ற எதிர்வினைகளை எழுத வேண்டியேற்படுகிறது.
நான் சந்தித்த பெரும்பாலானவர்களிடம் பெண்போராளிகள் தொடர்பாக இவ்விதமான ‘சரோஜாதேவி’ பார்வையே இருக்கிறது. ‘சனல் நான்கில் அப்படியான காட்சிகள் வந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இவர்களையெல்லாம் சும்மா விட்டிருப்பார்களா’ என்றார் அண்மையில் ஒருவர். எவ்வளவு மோசமான தர்க்கங்களையெல்லாம் வைத்துள்ளோம்? நூற்றுக்கணக்கான ஆண் போராளிகளை சுட்டுக் கொன்ற இதே இராணுவம்தான் பல்லாயிரம் ஆண் போராளிகளையும் விடுதலை செய்தது என்ற தர்க்கம்தான் இதற்கு ஆகச்சிறந்த பதிலாகயிருக்குமென்ற போதும், தர்க்கங்களிற்கப்பாலான உலகத்தையே நாம் சிருஸ்டித்துள்ளோம். நமது பூமியில் அப்பிள்ப் பழங்கள் கீழ் நோக்கித்தான் விழ வேண்டுமென்ற அவசியமெல்லாம் கிடையாது. வசதியைப் பொறுத்து மேல்நோக்கியும் விழலாம்.
போராளிகள், பொதுமக்களென்ற பேதமின்றி ஒரு தொகுதிப் பெண்கள் இராணுவத்தின் அத்துமீறல்களிற்கு உட்பட்டார்கள் என்பது உண்மையே. துயரமென்னnனில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். யுத்த வலயத்திலிருந்து சிறுசிறு குழுக்களாக தப்பிச் சென்றவர்களிலிருந்த இளம்பெண்கள், களங்களில் சிறுசிறு எண்ணிக்கையில் கைது செய்யப்பட்ட, சரணடைந்த போராளிப் பெண்களில் அனேகர் இந்த விதமான கொடுமைகளின் பின்னர் கொல்லப்பட்டனர். இந்தவிதமான பெண்களையும், சிறிய எண்ணிக்கையில் பாதுகாப்பு வலயத்தைவிட்டு வெளியேறிய சனங்களையும் இராணுவம் பல்வேறு இராணுவத்தேவைகளிற்காக களத்தில் உபயோகித்து கொன்றது. ஆபத்தான பிரதேசங்களில் தமது முன்னரண்களை பலப்படுத்துவது, முன்னேறும் பொழுது மனித கேடயமாக பயன்படுத்துவது முதலான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
இதற்காக சரணடைந்த எல்லோருமே இந்த விதமான கொடுமைக்காளானார்கள் என்று அர்த்தமாகாது. வெற்றி பெற்றவர்களின் அப்போதைய மனநிலை மற்றும் தீர்மானங்களை விட களங்களும், அரசியல்ச் சூழலும் செல்வாக்குச் செலுத்தும் விடயமிது. யுத்தத்தின் இறுதிநாட்களிற்கு முற்பட்ட களங்களில் சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் மிக மோசமாக பாலியல்க் கொடுமைகள் இழைக்கப்பட்டு கொல்லப்பட்ட போதும், இறுதிநாட்களில் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிற்கு வந்தவர்கள் இந்தவிதமான கொடுமைகளிற்குட்படும் பொதுவானசூழல் இருக்கவில்லை. புனர்வாழ்வு முகாம்கள் தவிர்ந்த விசாரணையிடங்களிற்கு கொண்டு செல்லப்பட்ட மிகச்சிறிய எண்ணிக்கையினரும் இந்தச் சூழலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
ஆண்களிடம் சரணடைந்தவர்கள், ஆண்களின் காவலில் புனர்வாழ்வு பெற்றவர்கள் எப்படி ‘சிந்தாமல் சிதறாமல்’ வெளிவரலாமென பலர் நினைக்கிறார்கள். நமது சமூகத்தில் பெண் தொடர்பாக நிலவுகின்ற மதிப்பீடுகள் அணுகுமுறைகள் மற்றும் இதுவரையான போரில் பெண்கள் நடத்தப்பட்ட விதம், அதிலும் குறிப்பாக போரில் ஈடுபட்ட தமிழ்ப்பெண்கள் இராணுவங்களினால் நடத்தப்பட்ட விதம் குறித்த முன்னனுபவத்தினால் இப்படியான மனேநிலை நம்மர்களிடம் இருக்கின்றது. போர் நமது மதிப்பீடுகளிற்கு அப்பாலானது. இறுதிப்போர் தொடர்பான நமது எந்த மதிப்பீடுகளும் சரியானவையாகயிருக்கவில்லை. ஆகவே இந்த விடயத்தில் நமது மதிப்பீடுகளை மாற்றியாகவே வேண்டும். புனர்வாழ்வு முகாம்களில் (நன்றாக கவனிக்கவும் புனர்வாழ்வு முகாம்களில்) இராணுவத்தினால் பாலியல் அத்துமீறல்கள் நடத்த வாய்ப்பிருக்கவில்லையென்ற உண்மையைச் சொல்வது, அரசை ஆதரிப்பதாகுமென யாராவது ‘போராளிகள்’ நாளையே கட்டுரை எழுதலாம். சுமக்கின்ற சிலுவைகளுடனொன்றாக, நமது சகோதரிகளிற்காக இன்னொரு சிலுவையையும் சுமந்துவிடலாம்.
விடயங்களை ஆதாரங்களினடிப்படையில்த்தான் நம்ப வேண்டும் என்ற போதிலும், சில விடயங்களை நம்பிக்கை சார்ந்தும் நம்ப வேண்டியதாகத்தான் நம் வாழ்க்கை அமைந்துள்ளது. அப்படியான நம்பிக்கைகளில்த்தான் மனித வாழ்வின் ஆதாரமுமிருக்கிறது. நம்மில் யாருமே திருமணத்தின் முன் பெண்ணினதோ ஆணினதோ கன்னித்தன்மை குறித்த ஆதாரங்களைக் கேட்பதில்லை. திருமணத்தின் பின்னரும், துணை தவிர்ந்த பிறருடன் உறவுண்டா என்பதற்கான சோதனைகளை வருடாவருடம் செய்வதில்லை. எல்லாமே நம்பிக்கை சார்ந்தது. இப்படியாகத்தான் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நியதிகளிற்கு உட்படாதவர்கள், இயல்பான வாழ்வு வாழ முடிவதில்லை. நிராகரிக்கப்பட்டவர்களாக தனிமையில் வாழ வேண்டியதுதான்.
பெண்போராளிகள் விடயத்திலும் இந்த அணுகுமுறையே சரியானது. அரசாங்கத்திற்கு நாலு அடி கொடுப்பதென யாராவது தீர்மானித்தால், தயவு செய்து உறைக்கும் விதமாக குறைந்த பட்சம் கற்களாலாவது தாக்குங்கள். நெருக்கடியிலிருக்கும் அந்தப்பெண்கள் உடுத்தியிருக்கும் கந்தல் ஆடைகளையும் களைந்து கறுப்புக் கொடி காட்ட எத்தனிப்பவர்கள், உண்மையான அர்த்தத்தில் அந்தப்பெண்களின் எதிரிகள்தான்.
ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்படும் இந்த வழமையற்றவற்றின் வகைமாதிரிகளை வழமையெனக் கொள்ள முடியாது. இந்த வகைமாதிரிகளை வழமையெனப் பிரச்சாரம் செய்வது எண்ணற்ற நம்மவர்களின் மீது நாங்களே நிகழ்த்தும் அத்துமீறிய கொடுமைதான்.
இணையங்களில் போராடுபவர்கள் தமிழீழத்தை அடைவதற்க கண்டபிடித்துள்ள ஆகச்சிறந்த வழியாக, இந்தப்பெண்களின் அவலங்களையும் உடலங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் யாருமே, போராளிப் பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. இணையத்தில் நடத்தும் ஊடறுப்புத் தாக்குதல்களில் தமது சகோதரிகளின் ஆடைகளையெல்லாம் பலவந்தமாக கழற்றி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவிற்கெவ்வளவு அவர்களை நிர்வாணமாக்குகிறோமோ அவ்வளவிற்கவ்வளவு வெற்றியடைவதாக புளகாங்கிக்கிறார்கள்.
யாரோ சாதாரணர்கள்தான் திருமணம் முடிக்கப் போகிறார்கள். அப்படியானவர்களின் மனங்களில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்காமலிருப்பதும் நம் கடமைதான். அப்படியானால் அந்தவிடயம் பற்றி பேசவே கூடாதா என்று யாரும் கேட்கலாம். அவற்றையும் பேசுவோம். சரியான தகவல்களுடன். அவை வழமையற்றவற்றின் வகைமாதிரிதான் என்ற புரிதலுடன்.
இந்த நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை யாராவது கோத்தபாயவின் காதில் போட்டால், அவரே கதிகலங்கிப் போய்விடக் கூடும். விசாரணையிடத்தில் ஐம்பது பேர்வரையில் பாலியல் கொடுமைகள் சகிக்காமல் தற்கொலை செய்தார்கள், அமைச்சர்கள் அந்தக் கொடுமைகளைச் செய்தார்கள் என்பதையெல்லாம் படிக்க, தென்னிந்திய திரைப்படமொன்றின் திரைக்கதையை படிக்கும் உணர்வே தவிர்க்கவியலாமல் ஏற்பட்டது.
இந்த நேர்காணல் வழமையற்ற வகைமாதிரிகளின் மீதான புனைவாகயிருக்கின்றதெனக் குறிப்பிட்டேன். அதனை கால, இட, தகவல் பிழைகளுடன் சுட்டிக்காட்டலாமென்றாலும், யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புக்களின் இயல்பொன்றை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.
ஆனந்த விகடனில் பேசியதாகக் குறிப்பிடப்படும் போராளியின் கூற்றுப்படி பார்த்தால், கைது செய்யப்பட்டவர்கள் கூட்டங்கூட்டமாக பலியல் கொடுமைக்காளாக்கப்பட்டுள்ளார்கள். அப்படியான தகவலெதுவுமே இல்லை. விசாரணையிடங்களில் தனிமையிலடைக்கப்பட்டவர்கள்தான் இப்படியான நிலைக்காளானதாக தகவல்களுள்ளன. கூட்டங்கூட்டமாக கொடுமை நடைபெற்றது, யுத்தம் நடந்த பிரதேசத்தில். அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். யுத்தத்தில் ஈடுபடும் தரப்புக்கள் ஒரு குற்றத்தை செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் அதனை இரகசியமாகவே செய்கிறார்கள். குற்றத்தை நிகழ்த்திவிட்டு, சாட்சிகளை தப்பவிடுவதில்லை.
யுத்தத்தின் பின் சரணடைந்தவர்கள் தொகையாக தற்கொலை செய்து கெண்டார்கள் என்று வைத்துக் கொண்டால், அதனைக் கண்டவரின் ஆவியினால்த்தான் இப்பொழுது பேச முடியும். ஏதாவதொரு தரப்பினால் ஒருவர் கொல்லப்பட்டால் அவருடன் கூடச் சென்றவரும் (அதாவது சாட்சி) கொல்லப்பட்டு விடுவார். அவர் எவ்வளவுதான் நல்லவர், அப்பாவியென்ற போதிலும். இதுவரை நடந்த எல்லா சம்பவங்களிலும் இதற்கு உதாரணங்களுள்ளன. சரணடைவின் பின்னர் இப்படி நடந்து, சாட்சியொன்று தப்பித்தால், அது தம்மை அதிக நெருக்கடிக்குள்ளாக்குமென்பதை இராணுவம் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது. இதனால்த்தான் போராளிகள் சரணடைந்ததற்கு சாட்சியாக இருந்த கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் காணாமல்ப் போனார். சரணடைந்த முக்கியஸ்தர்களுடன் கூடயிருந்த சாதாரணமானவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
ஒருவேளை இந்த நேர்காணலைச் செய்தவர், தன்னளவில் சரியாகவும் செயற்பட்டு, பிழையான தகவல் மூலமொன்றில் சிக்கியிருப்பதற்கான வாய்ப்புகளுமுள்ளன. அல்லது அதிக கவர்ச்சி வேண்டி அந்தப்பெண் அப்படி கதைத்திருக்கலாம். எது எப்படியோ அவற்றின் உண்மைத்தன்மைக்குப் பொறுப்புக் கூற வேண்டியது அதனைத் தயாரித்தவரே. ஈழத்தவரான அவரிற்கு அதனைப் புரிந்து கொள்ள முடியாமல்ப் போனது வியப்பளிக்கிறது.
அதேபோல இந்த நேர்காணலிற்கான எதிர்வினைகளில் சொல்லப்படுவதைப் போல, இதெல்லாம் அரசநிகழ்ச்சிநிரலாகயிருப்பதற்கும் வாய்ப்புகளில்லை. தீவிர தமிழ்தேசியம் பேசுபவரின் மகளைப் பார்த்து யாரும் கண்ணடித்தாலே, அரச நிகழ்ச்சி நிரலில் நடந்த காரியமிதுவென்றே நம்பும் நம்மவர்கள் மத்தியில் வாழ நேர்ந்துள்ளதால், இந்தவிதமான குற்றச்சாட்டுகளை பல்லைக்கடித்தபடி பொறுத்துக் கொள்வதைத்தவிர நம்மிடம் வேறு எந்த வழிதான் உள்ளது? இதற்கு வந்த பெரும்பாலான எதிர்வினைகள், பேட்டி கண்டவர் மீதான அவதூறுகளாகத்தான் வந்திருந்தன. இந்தப் பேட்டியை மட்டுமல்ல, அதனை எதிர் கொண்டவர்களின் செயல்களும் கண்டிக்கத்தக்கனவே. எதிர்வினைகளென்ற பெயரில் வெளியானவையெதுவுமே அதனை கருத்தியல் ரீதியாகவோ, ஆதாரமான உண்மைகளினடிப்படையிலோ எதிர் கொண்டிருக்கவில்லையென்பதைப் பார்க்கையில் நமது ஊடக, இணையப்பரப்பு குறித்த சலிப்பணர்வே எஞ்சியது.
பெண்கள் பற்றிய இவ்வாறான அபிப்பிராயத்தை அரசுகள் உருவாக்குவதற்கான தேவைகள் என்ன என்பது குறித்தம் நாம் புத்திபூர்வமாக சிந்திக்க வேண்டும். ராஜபக்ச மினைக்கெட்டு விகடன் செய்தியாளரொருவரை விலைக்கு வாங்கி, இவ்வாறான கட்டுரையெழுதுவித்தார் என்பதெல்லாம் விஜயகாந்த் படங்களில் மட்டுமே நடக்கக்கூடியது. இந்த வகையான எழுத்துக்களின் தோற்றுவாய் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல சமூகஉளவியல் சார்ந்தது. கூடவே, விகடன் வகையறா பரபரப்பு பத்திரிகைத்தனமும் இணைந்தால் கேட்கவும் வேண்டுமா?
இந்த யுத்தம் என்ன மாதிரியான அவலங்களையெல்லாம் நம்மிடையே விதைத்திருக்கிறது! தாங்கள் சீரழிக்கப்படவில்லையென்பதை எங்களிடம் நிரூபிக்க கோரி நாங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு சிதை மூட்டி எங்களிற்குள்ளாகவே அவர்களிற்கு அக்கினிப்பரீட்சை நடாத்திக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு கொடூரமானது.
கனவுகளாலும், இலட்சியங்களாலும் நிறைந்த உலகத்திலிருந்து பிடுங்கப்பட்டு, ஒரேநாளில் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த உலகத்தில் இந்தப் பெண்கள் விடப்பட்டுள்ளனர். இந்த உலகத்தில் வாழ்வதற்கான நெருக்கடிகளைத்தான் சிங்களவர்கள் கொடுத்தார்கள். அதனிலும் மோசமானவர்கள் நாங்கள். அவர்கள் ஒவ்வொருவருமே பாலியல் கொடுமைகளிற்குட்படாத தூயவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய ஒரு காலத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம்.
என்ன மாதிரியானதொரு காலத்தில் வாழ்கிறோம்!
நன்றி யோ.கர்ணன்.கொம்
0 comments :
Post a Comment