சி.ஐ.ஏ. தலைவர் சிக்கிய ‘பெண் விவகாரத்தில்’ அடுத்த வி.ஐ.பி. சிக்கினார்!
அமெரிக்காவை பரபரக்க வைத்துக் கொண்டிருக்கும் ‘பெண் விவகாரத்தில்’ அடுத்த பெரிய தலை உருள்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையின் தளபதி, ஜெனரல் ஜான் அலன் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கி அந்த விவகாரத்திலேயே இந்த ராணுவத் தளபதியும் சிக்கிக் கொண்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி, இந்த விவகாரத்தில் ஜெனரல் ஜான் அலன் விசாரிக்கப்படுகிறார் என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இந்த ராணுவத் தளபதிக்கும், ஜில் கெலி என்ற பெண்மணிக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றியே விசாரணை நடக்கிறது.
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் தலைவர் டேவிட் பெட்ராயஸ் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு, அவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையில் இருந்த தொடர்பு காரணம். அந்த பெண் பெயர் போலா ப்ராட்வெல்.
போலா தமக்கு மிரட்டல் இமெயில்களை அனுப்பினார் என FBIயிடம் குற்றச்சாட்டை தெரிவித்தவர், ஜில் கெலி என்ற 37 வயது பெண். டேவிட் பெட்ராயஸின் குடும்ப நண்பரான இந்த பெண்ணுடன், ராணுவ தளபதி ஜான் அலன் வைத்திருந்த தொடர்பு குறித்தே தற்போது விசாரணை நடைபெறுகிறது.
இந்த விசாரணைக்காக 20,000 முதல் 30,000 பக்கங்கள் வரையுள்ள இமெயில்கள் தற்போது FBIயால் ஆராயப்படுகிறது.
ராணுவத் தளபதிக்கும், ஜில் கெலி என்ற பெண்ணுக்கும் 2010ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை இருந்த இமெயில் தொடர்புகளே இந்த 20,000 முதல் 30,000 பக்கங்கள்.
இந்த இமெயில்களில் இருப்பவை செக்ஷூவல் விவகாரமா அல்லது வேறு ஏதாவது ரகசியமா என்பது தெரியவில்லை. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள ராணுவ தளபதி ஆப்கானிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்டு, தற்போது வாஷிங்டன் நகரில் தங்கியுள்ளார் என்று தெரியவருகிறது.
இதனுடன் தொடர்புடைய எமது மற்றைய கட்டுரைகளை கீழேயுள்ள ‘தொடர்புடையவை’ பகுதியில் பார்த்து வைக்கவும். காரணம், அடுத்து வரும் தினங்களில் இந்த விவகாரம் பெரிதாக அடிபடப்போகிறது.
0 comments :
Post a Comment