காசாவில் தொடரும் ரொக்கெட் தாக்குதல்களால் பலர் பலி- காயம் இஸ்ரேஸ்-ஹமாஸ் தொடர்ந்து தாக்குதல்
காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுபற்றி இஸ்ரேலிய இராணுவம், கருத்து வெளியிடுகையில் குறித்த வீட்டில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தங்கியிருப்பதாகக் கருதியே அந்த வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியது.
ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டபோது, குறித்த ஹமாஸ் அதிகாரி அங்கு தங்கியிருந்தாரா என்பது தமக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
.
முன்னதாக, 'இலக்குத் தவறி' இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று வெளியிட்ட தகவல் பற்றி ஆராய்ந்துவருவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
ஆனால் பின்னர், அந்த தகவலை மறுத்த இஸ்ரேல், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவரின் வீட்டின்மீது சரியாக இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல்கள் இன்று 6 நாளாக தொடர்கின்றன.என்பதோடு
நேற்றிரவு முதல் நடந்த தாக்குதல்களில் காசாவில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடைசி மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய படையினர் கூறுகின்றனர்.
அத்தோடு ஹமாஸ் ஆயுததாரிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தொடர்ந்தும் ராக்கெட் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. நேற்றிரவு முழுவதும் காசாவிலிருந்து ஒரு ராக்கெட் குண்டே ஏவப்பட்டுள்ளது.
ஆனால் இன்று காலை மீண்டும் காசாவுக்குள்ளிருந்து ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்ததாக இஸ்ரேலிய படையினர் கூறுகின்றனர். கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த மோதல்களில் காசாவில் 95 பேர், பெரும்பாலும் பொதுமக்கள், கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய
இஸ்ரேலியர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலும் ஹமாஸும் உடனடி மோதல் தவிர்ப்புக்கு வரவேண்டுமென்று ஐநா தலைமைச் செயலர் பான்-கி மூன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக இஸ்ரேல்-காசா வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்காக பான் கி மூன் கெய்ரோ செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment