Tuesday, November 13, 2012

மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவை நடாத்தும் வாய்ப்பு இலங்கைக்கு

மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவை இலங்கையில் நடாத்தும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. இது இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் விசேட நிகழ்வாக பதிவாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவை, ஹம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சீனாவின் மெக்காவோ நகரில் அண்மையில் இடம்பெற்றது.

தேசிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஆசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான ஹேமசிறி பெர்னாண்டோ, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் ஆர்.பி. சொய்சா ஆகியோர் இலங்கை சார்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஒலிம்பிக் கமிட்டி சார்பில் ஆசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷேக் அஹமட் அல் ஸஹாட் அல் ஸபா கைச்சாத்திட்டார்.

இப்போட்டியின் அநுசரணையை பெற்றுக்கொள்வாதற்காக, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் போட்டியிட்ட போதும், இலங்கைக்கே அவ்வாய்ப்பு கிடைத்தது.

இப்போட்டியை முன்னிட்டு, புதிய விளையாட்டு கிராமமொன்றை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சர்வதேச விளையாட்டுக்களை நடாத்தும் உரிமையை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குவதற்கு, ஆசிய ஒலிம்பிக் கமிட்டி, இணக்கம் தெரிவித்துள்ளது. 45 நாடுகளின் பங்கேற்புடன் மெக்காவோ உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஆசிய ஒலிம்பிக் கமிட்டியின் வருடாந்த மாநாட்டில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com