Tuesday, November 6, 2012

ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள்!

இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றதாம்.

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாத நகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள்.

இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

கண்களுக்கு எந்தவித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இது புற்றுநோய், குழந்தையின்மை, ஹோர்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி விடும். இதில் 15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது, தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹோர்மோன் கோளாறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள் நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com