இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து முஸ்லீம்கள் நாளை ஆர்ப்பாட்டம்
பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தலும் வெளியாகியுள்ளது.
கொழும்பு, கல்முனை, சம்மாந்துறை, கிண்ணியா, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஜும்ஆ தொழுகையினை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு – 2 தெவட்டஹக பள்ளிவாசலுக்கு முன்னால் நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை அடுத்து இடம்பெறவுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டதும் பதிலுக்கு ஹமாஸ் இயக்கமும் தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment