Monday, November 5, 2012

போருக்கு பின்னர் ஊடகங்களின் ஊடாகவே புலிகள் போராடுகின்றனர் ஜனாதிபதி

.

புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல ஊடகங்களின் ஊடாகவே போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வட்டியற்ற வாகனம் கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டத்தினை வைபவ ரீதியாக வழங்கும்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அலரி மாளிகையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மடிகணினிகளும்வழங்கப்பட்டன. இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில்-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருமுறை- ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு இங்கிருக்கின்றவர்களில் சிலர் சென்றிருக்கலாம். இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர்.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே கூடுதலான கேள்விகளைக் கேட்டனர். ராஜீவ் காந்தி மரணம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாலசிங்கம் மன்னிப்பு கேட்டமை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

ஆனால்- பிரேமதாஸ- லலித் அதுலத்முதலி- காமினி பொன்சேகா ஆகியோரின் படுகொலைகள்- ஹரந்தலாவ- திம்புலான போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்- தலதா மாளிகை- ஸ்ரீமா போதி ஆகிய வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் படுகொலைகள் குறித்தும் இலங்கை ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பவில்லை.

கேள்விகளை கேட்டிருந்தாலும் அவர்களால் பாதுகாப்பாக திரும்பியிருக்க முடியாது. ஏனெனில் அன்று ஊடக சுதந்திரம் இருக்கவில்லை.எனினும்- நாட்டில் ஊடகவியலாளர்கள்- கலைஞர்கள்- எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பாதுகாப்பாக இருக்கின்றனர்.


நாங்கள் யாருக்கும் கடன்கொடுக்கவில்லை. இது எங்களுடைய கடப்பாடாகும். புலிகள் அமைப்பினர் உலகில் ஊடகங்களை நடத்துவது உங்களுக்கு தெரியும். ஊடக நிறுவனங்களை அப்படியே விலைக்கு பெற்றுவிடுகின்றார்கள்.

ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காகவும் பலியான தங்களுடைய அங்கத்தவர்களின் குடும்பங்களையும் பெற்றோர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகவும் காசு கொடுத்தவர்கள் இன்று ஊடகங்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கின்றனர் என்றார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com