Tuesday, November 6, 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயகவிற்கு எதிராக 117 உறுப்பிர்கள் கைச்சாத்திட்டு, சபாநாயகரிடம் கையளித்த குற்றப்பிரேரணை, இன்று சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசருக்கு எதிராக, குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் பல செயற்பாடுகள் தொடர்பில், கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், அரச மீது குற்ற்சசாட்டுக்களை சுமத்தினர். ஷிரானி பண்டாரநாயகவின் கணவரான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரசாத் காரியவசம், நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய, அவருக்கு எதிரான நிதிக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நாட்டின் பிரதம நீதியரசர் ஒருவரின் கணவரின் செயற்பாடு தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அரசிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தின. பிரதம நீதியரசருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து, ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தியதை தொடர்ந்து, ஷிரானி பண்டாரநாயகவிற்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கமைய, அரசியல் யாப்பிற்கு இணங்க, பிரதம நீதியரசருக்கு எதிராக, பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட உறுப்பினர்களினால், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கையளிக்கப்பட்டன.

இக்குற்றப்பிரேரணை தமக்கு கிடைக்கப்பெற்றதாக, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் இது உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் யாப்பின் உறுப்புரை 107 இன் 2 ஆம் வாசகத்திற்கமைய, பிரதம நீதியரசர் அல்லது ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதியொருவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கு, குற்றச்சாட்டுக்கள் அல்லது துர்நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டு, குற்றப்பிரேரணை சமர்ப்பிக்க முடிவதுடன், அவ்வாறான பிரேரணையை சமர்ப்பிப்பது தொடர்பான யோசனை, மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒப்பமிட்டு, சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும். இதற்கமைய 75 உறுப்பினர்களே கைச்சாத்திட வேண்டும். இருப்பினும் 117 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, சபாநாயகருக்கு பிரேரணையை கையளித்துள்ளனர்.

இது அரசினால், அரசியல் யாப்பிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும். சபாநாயகர் குற்றப்பிரேரணையை, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியதன் பின்னர், பாராளுமன்றத்தின் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களை கொண்ட செயற்குழு , இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட வேண்டும்.

பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்,
செயற்குழு சபையில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளதுடன், குற்றம் சாட்டப்பவர், தனிப்பட்ட ரீதியில் அல்லது பிரதிநிதியூடாக செயற்குழு முன் ஆஜராகி, விளக்கமளிக்க உரிமையிருப்பதாகவும், யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்குழு சபையினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்திற்கு மீள அறிக்கைப்படுத்தப்பட்டதன் பின்னர், உரிய குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டிருப்பின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, குற்றப் பிரேரணையின் செயற்பாடுகள் பூர்த்தியடையும்.

திருமதி. ஷிரானி பண்டாரநாயக, 43வது பிரதம நீதியரசராக செயற்படுகின்றார். பிரதம
நீதியரசர் ஒருவருக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருப்பது, இது முதல்
தடவையல்ல என்பது, குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com