காஸா மீது இஸ்ரேல் எரிகணை தாக்குதல்: காயமடைந்த பாலஸ்தீன குழந்தை
பாலஸ்தீனத்தின் காஸா மீது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு எந்நேரமும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெடன்யாகு அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஹாமாஸ் இராணுவக்குழுவினரின் மூத்த தலைவர் கலில் அல்-ஜபரி, இஸ்ரேலின் எரிகணை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் நெடன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அல்-ஜாப்ரி தனது காரில் சென்று கொண்டிருந்த போது குறித்த கார் இஸ்ரேலின் எரிகணை தாக்குலுக்கு உள்ளானது. இந்நிலையில் 'ஹாமாஸுக்கும் ஏனைய தீவிரவாத இஸ்லாமிய குழுவினருக்கும் நாங்கள் தெளிவான செய்தி ஒன்றை இன்று சொல்லியிருக்கிறோம்.
தேவை ஏற்படின் காஸா மீது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கிறது. எமது மக்களை பாதுகாக்க எதையும் செய்வோம்' என இன்று இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் நேரடியாக நெடன்யாகு அறிவித்துள்ளார்.
ஜாப்ரி, ஹாமாஸ் இயக்கத்தின் மேலும் சில உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 9 பேர் நேற்றைய காசா மீதான எரிகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து இஸ்லேல் - பாலஸ்தீனமிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் பொதுமக்கள் மீதான தாக்குதலை தடுக்கும் பொருட்டு இஸ்ரேல் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பதற்ற நிலைமைகளை உடனடியாக தவிர்க்குமாறு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டிலிருந்து, காஸாவின் ஹமாஸ் குழுவினரின் முக்கிய தலைவர்கள் பலர் இஸ்ரேலிய துருப்புக்களினால் இலக்குவைத்து கொல்லப்பட்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment