நாளை யாசீர் அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகின்றது.
பாலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாசீர் அரபாத்தின் உடல் நாளை செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நஞ்சூட்டப்பட்ட நிலையிலா அவர் 2004-ம் ஆண்டில் பிரான்ஸில் உயிரிழந்தார் என்பதை ஆராய்வதற்காக அவரது உடலில் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இரத்தத்தில் காணப்பட்ட கோளாறு காரணமாக அரபாத்துக்கு ஏற்பட்ட பக்கவாதத்தினாலேயே அவர் உயிரிழந்ததாக முன்னர் வெளியாகியிருந்த மருத்துவ அறிக்கைகள் கூறின.
ஆனால், ஆவணக்காட்சிப் படம் தயாரிக்கும் நிறுவனமொன்றின் கீழ் பணியாற்றிய சுவிட்ஸலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள், அரபாத்தின் உடலில் பொலோனியம்-210 என்ற இரசாயனம் காணப்பட்டதாக தகவல் வெளியிட்டதையடுத்து கடந்த ஆகஸ்டில் பிரான்ஸ் அதுபற்றிய விசாரணைகளை ஆரம்பித்தது.
மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் அமைந்துள்ள அரபாத்தின் கல்லறைப் பகுதி இந்த மாதம் தொடக்கத்திலிருந்து பொதுமக்கள் சென்றுபார்க்க முடியாதபடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்படும் உடலில் இருந்து டிஎன்ஏ சாம்பிள் மாதிரிகளை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தனித்தனியாக எடுத்துச்சென்று ஆய்வுக்குட்படுத்துவார்கள் என்று பாலஸ்தீனத்தின் முன்னாள் உளவுத்துறை தலைவர் தவ்பீக் திராவி கூறினார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை 35 ஆண்டுகள் வழிநடத்திய யாசீர் அரபாத் 1996-ம் ஆண்டில் பாலஸ்தீன அதிகாரசபையின் முதலாவது அதிபரானார்.
2004-ம் ஆண்டில் அரபாத் மோசமாக கவீனமுற்றிருந்தார். இரண்டு வாரங்களின் பின்னர் பிரான்ஸின் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
2004-ம் ஆண்டில் நவம்பர் 11-ம் திகதி உயிரிழக்கும் போது அவருக்கு வயது 75.
0 comments :
Post a Comment