வெலிக்கடைச் சிறையில் நடந்த உண்மை சம்பவம் என்ன? பிரதிப்பொலிஸ் மா அதிபர் விளக்குகிறார்
வெலிக்கடைச் சிறையில் துப்பாக்கிகளை ஏந்தியுள்ள கைதிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று திட்டமிட முடியாமல் இருந்தது. அதனால், அவர்களை எதிர்க்கொள்ள பயற்சிபெற்ற எதிர்கொள்ளக்கூடியவர்கள் தேவைப்பட்டார்கள். அதனாலேயே கொமாண்டோ படைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டனர் என்றும் சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்
வெலிக்கடையில் கைதிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் மோதுவதற்கான சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்றும் நிலைமை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில அவர் கூறுகையில்,
வெலிக்கடை சிறைக்கைதிகள் சட்டவிரோதமாக தொலைபேசிகளை உபயோகித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், போதைப்பொருள் விற்பனை மேற்கொள்வதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 500பேர் கொண்ட குழுவினர், சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறைக் கைதிகள் அதிரடிப்படையினருக்கு எதிராக செயற்பட முற்பட்டனர்.
சிறைச்சாலைகளுக்குள் சோதனை மேற்கொள்ளப்படுவதென்பது சாதாரண விடயமே. இதற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முதலில், மகசின் சிறைச்சாலையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து நண்பகல் 12 மணியளவில் வெலிக்கடை பிரதான சிறைச்சாலையில் சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், வெலிக்கடை பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இந்த சோதனை நடவடிக்கையை விரும்பவில்லை. அதனால், அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக செயற்பட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் படையினரின் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்டனர். இதனடிப்படையில், சோதனைக்குச் சென்ற அதிரடிப்படையினரை இடையூறு செய்ய ஆரம்பித்தனர்.
இதற்கமைய அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையினை அடுத்து, சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் வந்த கைதிகள், குழு அடிப்படையில் படையினருக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தனர்.
சிறைச்சாலைக்குள் இருந்த ஆயுத களஞ்சியசாலையையும் உடைத்து அங்கிருந்த 70இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கொள்ளையிட்டனர்.
இதனையடுத்து அதிரடிப்படையினர் அனைவரும் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினர். இதன்போது சிறைச்சாலைக்குள் எவ்விதமான ஒழுக்க நடவடிக்கையும் பேணப்படவில்லை.
கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலையும் காணப்படவில்லை. காரணம், ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து கொள்ளையிடப்பட்ட 70இற்கும் மேற்பட்ட ஆயுதங்களை ஏந்தியவாறு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் படையினருக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு பிறகு, பாதுகாப்பு அதிரடிப்படையினர் மீது கைதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளத் தொடங்கினர். இதற்கிடையில், பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சிறைச்சாலைப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில், மாலை 6.30 மணியளவில், சிறைச்சாலைக்குள்ளிருந்து பிரதான வீதியை நோக்கி முச்சக்கரவண்டியொன்று வந்தது. அதில் சிறைக்கைதிகள் பலர் காணப்பட்டனர். அத்துடன் அவ்வண்டிக்கு பின்னால், மேலுமொரு தொகுதி கைதிகள் வந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியை வழிமறிக்க பாதுகாப்பு தரப்பினர் முற்பட்டதை அடுத்து, அதிலிருந்த கைதிகளில் சிலர் பாதுகாப்பு தரப்பினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.
இதனையடுத்து அதிரடிப்படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து கைதிகளில் 11பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 20பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இச்சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலைக்குள்ளிருந்த கைதிகள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களுடன் மிகவும் அமைதியற்ற விதத்தில் செயற்பட ஆரம்பித்தனர்.
அதன்போது, அவர்களுக்குள் எந்தவொரு கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறைச்சாலையின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு சிறைச்சாலை அதிகாரிகளுக்கே உள்ளது. இருப்பினும், அவர்களால்கூட சிறைச்சாலைக்குள் செல்ல முடியாத நிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. இருப்பினும், நாம் இந்த பிரச்சினையை பேசித் தீர்க்க முற்பட்டோம்.
சிறைச்சாலைகள் அமைச்சர் கஜதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எவ்வாறேனும், கைதிகளை சமாதானப்படுத்தி அவர்கள் வசமுள்ள துப்பாக்கிகளை மீளப் பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாக இருந்தது.
இருப்பினும் நள்ளிரவு 12.30 மணியாகியும் எமது முயற்சி பயனளிக்கவில்லை. இதனையடுத்து இராணுவத்தின் விசேட கொமாண்டோ படைப்பிரிவினர் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகள் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
காரணம், இங்கிருந்த எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும், சிறைச்சாலைக்குள் அப்போதைக்கு எவ்வாறானதொரு சூழ்நிலை காணப்படுகிறது என்பது தெரிந்திருக்கவில்லை. 70இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஏந்தியுள்ள கைதிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று திட்டமிட முடியாமல் இருந்தது.
அதனால், அவர்களை எதிர்க்கொள்ள பயற்சிபெற்ற எதிர்கொள்ளக்கூடியவர்கள் தேவைப்பட்டார்கள். அதனாலேயே கொமாண்டோ படைப்பிரிவினர் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதன்போது, சிறைச்சாலைக்குள் இருக்கும் மற்றுமொரு ஆயுத களஞ்சியசாலையை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களையும் கொள்ளையிடும் முயற்சியில் கைதிகளில் ஈடுபட்டு வருவதாக எமக்கு ஒரு தகவல் கிடைத்தது.
அத்துடன், தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த பிரதான வாயிலினூடாக தப்பிச் செல்லும் முயற்சியிலும் 200இற்கும் அதிகமான கைதிகள் குழுவொன்று ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.
அவர்களின் திட்டப்படி அக்குழுவினர் வெளியில் வந்திருந்தால், பாரியதொரு அழிவு ஏற்பட்டிருக்கும். இப்பகுதி இரத்த ஆறாக ஓடியிருக்கும். இதனைத் தடுப்பதற்கு முற்பட்ட இராணுவ கொமாண்டோ படையினர், சிறைச்சாலைக்குள் அதிரடியாக உட்புகுந்து விசேட இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள், சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி சிறைச்சாலையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கொமாண்டோ படைப்பிரிவினர் சிறைச்சாலைக்குள் நுழைந்து தங்களது விசேட இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த போதும், ஆயுதங்களுடன் இருந்த கைதிகள் பின்வாங்கவில்லை.
அவர்களும், இராணுவத்தினரை எதிர்த்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவாறு முன்னேறவே முயற்சித்தனர். இருப்பினும், சிறைச்சாலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் வியாபித்த கொமாண்டோப் படையினரின் தீவிர நடவடிக்கை நிலைமையை கட்டுப்படுத்தியது.
இதன்போது, கொமாண்டோப் படையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், படையினருடன் பரஸ்பர மோதலில் ஈடுபட்ட கைதிகளில் 11பேர் உயிரிழந்தனர். இந்த 11பேருமே இந்த கலவரத்துக்கு தலைமை தாங்கியவர்களாவர். இவர்களே, ஆயுத களஞ்சியசாலை உடைப்பு, படையினர் மீது தாக்குதல் மற்றும் தப்பிச்செல்ல முற்பட்ட குழுவினராவர்.
இந்த 11பேர் கொண்ட குழுவில், மரண தண்டனைக் கைதிகள் மூவர் அடங்குகின்றனர். இவர்களில் படுகொலைகள் பலவற்றுக்கு காரணகர்த்தாக்களான மரணதண்டனைக் கைதிகளான அசுவப்புலிகே ஜோதிபால (கபில), கங்கானம்லாகே மலிந்த நிலேந்திர பெல்பொல (மாலன்) மற்றும் சில்வா ஆகிய மூவருமாவர்.
ஆயுள் தண்டனைக் கைதிகளான மஞ்சு ஸ்ரீ ஹர்ஷ (கோட்டை பௌத்த மதத் தேரரின் படுகொலையுடன் தொடர்புடையவர்), நிர்மல் அத்தபத்து, துஷார சந்திர என்ற களு துஷார (இவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்கோஷ்டி நபர்), திஸ்ஸ குமார (பாலியல் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்), அஸ்வதீன், மலிக் சமீர பெரேரா (கொண்டமில) ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்' என்றார்.
இதேவேளை இத்தாக்குதல் சம்பவங்களில் முன்னாள் புலிகளோ அவர்களது அணிகளோ தொடர்பு பட்டிருக்கவில்லையென்று தெரிவிக்கப்படுவதோடு இதற்கு முற்றுமுழுதாக காடையர்களே காரணம் என்றும் தெரிவிக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment