இரத்தத்தில் நனையும் பாலஸ்தீனம் ! இந்தியாவும் உடந்தையென கண்டனங்கள்.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் இந்திய அரசுக்குக் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திலுள்ள காசா பகுதிமீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்துவதைத் தொடர்ந்து காசா நகரம் இரத்தத்தில் குளிக்கிறது. தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்றும் காஸாமீது இஸ்ரேல் தொடர்ந்த விமானத்தாக்க்குதலில் இதுவரை 88 ஃபலஸ்தீனிகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 700 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸின் எதிர் தாக்குதலில் இதுவரை 3 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஃபலஸ்தீன் காவல்துறையின் இரண்டாவது மிகப்பெரிய நிலையத்தின்மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதோடு காவல்நிலையம் முழுமையாக தரைமட்டமாகியுள்ளது. இன்று காலை நடத்திய தாக்குதலில், ஒரு வீட்டின்மீது விழுந்த குண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் எதிர்பாராமல் இத்தவறு நடந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரால் காஸாவில் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன. காஸாவுக்கான மூன்று பாதைகளையும் இஸ்ரேல் அடைத்துள்ளதால், போதிய உயிர்காப்பு மருந்துகளோ உணவுப்பொருட்களோ காஸாவுக்குள் வராமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஸாவின் எல்லைப்பகுதியில் தமது ஆக்ரமிப்பு படையினர் சுமார் 1 லட்சம் பேரை இஸ்ரேல் இறக்கியுள்ளது. இது, தரை மூலமாக காஸாவினைத் தாக்க இஸ்ரேல் தயாராகிவருவதைக் காட்டுவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் தானும் கலந்து கொள்ள இருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். அத்துடன், உடனடி வெடி நிறுத்தலுக்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், 'தம் மக்கள்மீதான தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கவும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் இஸ்ரேலுக்கு உரிமையுள்ளது' என கூறியுள்ள ஹிலாரி கிளின்டன், 'மத்தியக் கிழக்கில் அமைதி கொண்டு வர உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்' எனவும் 'இரு தரப்பும் அமைதிகாக்கவேண்டும்' எனவும் கூறியுள்ளார்.
மத்தியக்கிழக்கில் தற்போது உருவாகியுள்ள இப்பிரச்சனைக்கு, ஹமாஸின் முக்கியத்தலைவர்களில் ஒருவரை இஸ்ரேல் கொலைப்படுத்தியதும் ஐந்து தினங்களுக்கு முன்னர் தன்னிச்சையாக காஸாமீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இஸ்ரேலிடமிருந்து ஆயுதம் வாங்குவதை எதிர்த்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கும் ஆயுதங்களின்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அப்பாவி பலஸ்தீனிகளை இஸ்ரேல் கொன்றொழித்து வருகிறது.' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment