Wednesday, November 28, 2012

கொழும்பு மாவட்டச் செயலகம் நாராஹேன்பிட்டிக்கு தற்காலிகமாக மாற்றம்

கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரதான கட்டடத்திலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரை நாராஹேன்பிட்டியிலுள்ள திம்ரிகஸ்யாய பிரதேச செயலக புதிய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்க வைக்க தீர்மானித்துள்ளது.

இத்தகவலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள கொழும்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லை. எனவே மக்கள் இது தொடர்பில் அச்சமடையத்தேவையில்லை.

இதற்கமைய பிறப்பு, இறப்பு விவாக அத்தாட்சிகள் விநியோகப் பிரிவு, ஓய்வூதியப் பிரிவு, மாவட்ட செயலகத்தின் மறுபக்கத்திலுள்ள சமுர்த்தி, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் புள்ளிவிபர பிரிவுகளும் வழக்கம் போன்று செயற்படும் என்றும் மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

முற்றாக தீக்கிரையான மாவட்ட செயலகத்தின் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை வழக்கம் போல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment