குண்டு வீச்சு தீவிரமாகையில் இஸ்ரேல் காசாவின் எல்லையில் துருப்புக்களை அதிகரிக்கின்றது.
(By Bill Van Auken ) பாலஸ்தீனிய பிராந்தியத்தின் எல்லையில் இஸ்ரேல் துருப்புக்களை கூடுதலாக நிறுத்தியுள்ளவேளையில், இஸ்ரேலியப் போர்விமானங்கள் வியாழன் அன்று நெருக்கமாக மக்கள் வசிக்கும் காசாப் பகுதியில் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தின.
இஸ்ரேல் நேரம் காலை 10 மணிக்குச் சற்று முன்னதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அதன் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன் காசாவில் 70 இலக்குகளைத் தாக்கின என்று அறிவித்தார். காசா நகரம் மற்றும் 1.7 மில்லியன் பாலஸ்தீனியர்கள் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் தெற்கு, கிழக்கு எல்லைகளுக்கு நடுவிலும், மேற்கில் எகிப்து மற்றும் மத்தியதரக் கடல்பகுதிக்கு இடையே இருக்கும் 25 மைல் நீளமுள்ள பகுதியில் மிக உயரமான கறுப்புப் புகைகள் மேலெழுந்தன.
காசா நகரத்தில் வசிக்கும் மக்கள் அங்கே உள்ள மிகப் பெரிய கட்டிடங்களைக் கூட அதிர வைக்கும் பெரும் வெடிச் சத்தங்களைக் கேட்டதாகக் கூறினர். குழந்தைகளும் குடும்பங்களும் அச்சத்தில் அழுதன. இந்த வான் தாக்குதலைவிட கடலோரப் பகுதிகளில் இருந்த இஸ்ரேலிய ஆயுதக் கப்பல்களாலும் மற்றும் அதன் எல்லையைச் சுற்றி நிறுத்தப்பட்ட டாங்கிகளாலும் எறிகணைகளால் காசா தாக்கப்பட்டது. இஸ்ரேலிய ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் தாக்கப்பட்ட கட்டிடங்கள் புகைவிட்டு எரியும் உடைந்துபோகும் வீடுகளானதுடன், அருகில் இருந்த வீடுகளும் பெரிதும் சேதமுற்றன.
வியாழன் இரவு காசாவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 19 என உயர்ந்தது. காசாவின் சுகாதார அமைச்சரகம் 14, 16 வயதான இரு சிறுவர்கள் உட்பட மூவர் வடக்கு காசா கிராமமான Beit Hanoun இல் ஒரு வீட்டின்மீது குண்டு போடப்பட்டபோது இறந்தனர் எனக் கூறியுள்ளது. மூன்று சிறுவர் உட்பட இன்னும் 6 பேர் தாக்குதலில் காயமுற்றனர்.
புதன்கிழமை அன்று நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கடுமையான காயமுற்ற ஒரு பத்து மாதக் குழந்தையான ஹனின் தபிஷ் அதன் காயங்களினால் இறந்துவிட்டதாக வியாழன் காலை தகவல் வந்துள்ளது. வியாழன் இரவில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண குடிமக்கள் ஆவர். அதில் டஜனுக்கும் மேலான இளம் குழந்தைகளும் உள்ளன.
வியாழன் அன்று, பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்கள் செலுத்திய ராக்கெட்டுக்கள் தென்கிழக்கு இஸ்ரேலிய நகரான கிர்யத் மலாச்சியில் ஒரு அடுக்கு வீடுகள் கட்டிடத்தைத் தாக்கி, மூன்று இஸ்ரேலியர்களைக் கொன்றது.
மற்றும் இரண்டு பாலஸ்தீனிய ஏவுகணைகள் காசாவிற்கு வடக்கே 50 மைல் தூரத்திலுள்ள இஸ்ரேலின் வணிகத் தலைநகர் டெல் அவிவை தாக்கின. இவை இரண்டும், ஒன்று கடலிலும் மற்றொன்று ஒரு வரட்டு வயலிலும் எவ்வித சேதமும் விளைவிக்காமல் வீழ்ந்தன. 1991 முதல் பாரசீக வளைகுடாப் போருக்குப் பின், முதல் தடவையாக மூன்று மில்லியனுக்கும் மேலான மக்களைக் கொண்ட பெருநகரம் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
புதன்கிழமை இஸ்ரேல் ஒரு மூத்த ஹமாஸ் தலைவரை “இலக்கு வைத்துக் கொன்றபின்” ஆரம்பித்த வன்முறை அதிகரிப்பில், ஒரு இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒரு பாலஸ்தீனிய எதிர்ப்புப் போராளி ஆகியோர் வியாழன் அன்று காசாப் பகுதி எல்லையில் துப்பாக்கிச் சண்டையில் இறந்துபோனார்கள். பாலஸ்தீனியர்கள் காசைவைச் சூழ்ந்துள்ள ஒரு வேலியை வெட்டி சாய்த்துத் தெற்கு இஸ்ரேலுக்குள் சென்றபோது இந்த மோதல் தொடங்கியது.
வியாழன் அன்று இஸ்ரேலியத் தலைவர்கள் காசாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகரித்தனர். பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக், ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த அறிக்கையல், டெல் அவிவ் மீது ஏவுகணைத் தாக்குதல் முயற்சிக்கு இஸ்ரேல் காசா மீது பழிதீர்க்கும் என்று உறுதிமொழி அளித்தார். “இந்த விரிவாக்கம் எதிர்த்தரப்பை உரிய விலை கொடுக்க வைக்கும்” என்று பாரக் எச்சரித்தார். “தெற்கில் முன்னர் இருந்த அமைதியான நிலைமைக்குத் திரும்ப நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். அதை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம். இது ஒரு ஆரம்பம்தான்.” என்றும் சேர்த்துக் கொண்டார்.
இதேபோல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவும் தன்னுடைய அரசாங்கம் “நம் மக்களைக் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளது” என்று உறுதியளித்தார். பாலஸ்தீனிய மக்களிடையே இஸ்ரேலியப் படைகள் சுமத்தும் அச்சுறுத்தலையும் அதிகரிக்கும் குடிமக்கள் இறப்புக்களையும் நியாயப்படுத்த முயன்ற அவர், பாசாங்குத்தனமாக தேவைப்படுவது “அறுவை சிகிச்சை போன்ற தாக்குதல்கள்தான்” என்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை, ஆத்திரமூட்டலையும் எதிர்ப்பவர்கள் அதற்கான பொறுப்பைச் சுமக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் “பாலஸ்தீனியக் குடிமக்களின் பின் மறைந்துள்ளனர்” என்றார்.
காசாவிற்கு எதிரான தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் “ஆரம்பம்தான்”, இஸ்ரேலிய அரசாங்கம் “தேவையான நடவடிக்கையை எடுக்கத் தயார்” என்று கூறுவது டிசம்பர் 2008-ஜனவரி 2009ல் காசா மீது தரைவழிப் படையெடுப்பு போன்றது மீண்டும் நிகழுமா என்ற கவலையை எழுப்பியுள்ளது. அப்போரின்போது 1,400 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன் ஏழ்மையான பிரதேசத்தின் உள்கட்டுமானமும் அழித்தொழிக்கப்பட்டது.
இஸ்ரேலிய தரைப்படைப் பிரிவுகள் எல்லையில் அணிதிரட்டப்பட்டுள்ளதுடன், டாங்குகளையும் கவச வாகனங்களையும் கொண்ட ஏராளமான கனரக வாகன வரிசைகள் எல்லைக்குச் சென்று கொண்டிருப்பது தெரிய வருகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் 30,000 இருப்பிலுள்ள படையினரை திரட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து இராணுவத்தினர் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. வியாழன் அன்று காசாவை ஆளும் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸின் இராணுவப் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஜாபரியின் இறுதிச் சடங்குகளும் கோபத்துடன் செய்யப்பட்டன. புதன் அன்று இஸ்ரேலிய போர் விமான ஏவுகணைத் தாக்குதலினால் கொலை செய்யப்பட்ட ஜாபரி மற்றும் அவருடைய மெய்காவலர் மீதான படுகொலைதான் வன்முறை பெருகுவதற்குக் காரணமாக உள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த அரச கொலைக்கு பொறுப்பு ஏற்று, தெற்கில் உள்ள இஸ்ரேலிய மக்களை காசாவில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு உள்ளது என்று நியாயப்படுத்தியுள்ளபோது, இக்கொலைகள் கொல்லப்பட்டவர்களால் ஆத்திரமூட்டப்படாத, புதிய சுற்று வன்முறையைத் தூண்டும் திட்டத்தைக் கொண்டவை என்பதை தெளிவுபடுத்தும் காரணங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இஸ்ரேலின் இரகசிய உளவுத்துறை ஷின் பெட் -Shin Bet- தயாரித்துள்ள திட்டம் நெத்தென்யாகுவின் ஒன்பது உறுப்பினர் அடங்கிய அமைச்சரக உட்குழுவினால் திங்கள் நடந்த கூட்டத்தில் ஏற்கப்பட்டது. படுகொலைக்கு உத்தரவிடப்பட்டபோது, காசாவிற்குள் இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல்களாலும் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட சூடுகளாலும் தூண்டப்பட்டிருந்த முந்தைய ராக்கெட் தாக்குதல்கள் “குறைந்துகொண்டு வந்தன போல் தோன்றியது” என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
ஜாபரியைக் கொல்லும் முடிவு எடுக்கப்பட்டபின், “ஏமாற்றுத்தனத்தின் முதல் நடவடிக்கை முடிந்துவிட்டது. அரங்கின் உறுப்பினர் ஒருவர் பென்னி பெகின், இஸ்ரேல் வானொலி மூலம் தற்போதைய வன்முறைச் சுற்று முடிந்துவிட்டது போல் தோன்றுகிறது என்றார்.
ஹமாஸ் இத்தகவலை உண்மையானது என ஏற்றுக்கொண்டது போல் தோன்றியது.”
ஆனால் இது இஸ்ரேலிய ஏமாற்றுத்தனத்தின் மிகவும் தெளிவான பகுதியாகியது. அவர் படுகொலை செய்யப்பட்டபோது ஜாபரி இஸ்ரேலியர்களுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கைக்காக பின்கதவு வழியிலான பேச்சுவார்த்தைக்களில் ஈடுபட்டிருந்தார் என்று இந்நிகழ்வுகளில் இடைத்தரகராக இருந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பாலஸ்தீனிய ஆய்வு, தகவல் மையத்தின் இணை தலைவர் ஜேர்ஷோன் பாஸ்கின், சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினர் கிலட் ஷாலிட் விடுவிக்கப்படுவதற்கான கைதிகள் படையினர் மாற்றுப்பேச்சுக்களில் முக்கிய பங்கை வகித்தார். வியாழன் அன்று வெளிவந்த கட்டுரையில் அவர் இக்கொலை நடாத்தப்பட்டபோது, இதேபோன்ற பங்கை அவர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நீண்டக்கால போர் நிறுத்தத்திற்குப் பேச்சுவார்த்தைகள் நடத்தும்போதும் கொண்டிருந்ததாகக் கூறினார். இந்த மறைமுகப்பேச்சுக்களில் ஹமாஸ் சார்பில் ஜாபரி ஒரு தலைமை தாங்கும் நபராக இருந்தார்.
வியாழன் அன்று பாஸ்கின் எழுதினார்: “அஹ்மத் ஜாபரியை இஸ்ரேல் படுகொலை செய்த சில மணி நேரத்திற்கு முன் பேச்சுவார்த்தையில் ஹமாஸில் எனக்கு இணையான பங்கு வகிப்பவர் ஒரு வரைவு உடன்பாட்டை [போர் நிறுத்தத்திற்காக] ஜாபரிக்கும் மற்ற ஹமாஸ் தலைவர்களுக்கும் கொடுத்தார். “காசாவில் அது குறித்த பிரதிபலிப்பை அறியுமாறு” ஜாபரிக்கு கூறப்பட்டது. அவர் அவ்வாறு செய்யும்போதுதான் அவருடைய கார் இஸ்ரேலிய ஏவுகணை ஒன்றினால் புதன் அன்று தாக்கப்பட்டது. ஜாபரி இறந்து விட்டார். இதனால் இருதரப்பின் நலன்களுக்கான நீண்டக்கால போர்நிறுத்த உடன்பாட்டிற்கான வாய்ப்பும் முடிந்துவிட்டது.”
பாஸ்கினும் மற்றவர்களும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயலின் அப்பட்டமான அரசியல் உந்துதலைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். ஜனவரி மாதம் தேர்தல்களை எதிர்கொள்ளும் நெத்தென்யாகு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது போரைத் தூண்டுவது இஸ்ரேலுக்குள் இருக்கும் அதிகரித்துவரும் சமூக மோதல்களில் இருந்து திசைதிருப்புவதற்கான பயனுடைய ஒன்றாக கணக்கிடுகிறார். புதன் தாக்குதலுக்குப் பின் உடனடியாக இஸ்ரேலில் உள்ள “எதிர்க்கட்சிகள்” அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்று, தங்கள் பிரச்சாரங்களை இரத்து செய்தன.
ஆனால் இன்னும் நீண்டகால விளைவுடைய கணிப்பீடுகளும் இருக்கலாம். பல மாதங்களாக ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து இஸ்ரேல் வாஷிங்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு அந்நாட்டின் அணுத்திட்டம் ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. டெல் அவிவ் பல முறை ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளது.
காசா மீதான தாக்குதல் அத்தகைய தாக்குதலுக்கு ஒரு தயாரிப்பாக இருக்கலாம், ஒரு புறம், அருகில் உள்ள இராணுவ விரோதத்திறன் உடைய அமைப்பைச் செயலற்றதாக ஆக்கும் வடிவமைப்பில் இருக்கலாம்; மறுபுறமோ இந்த அப்பட்டமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குறித்து இப்பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் இருக்கும் அரசாங்கங்களின் பிரதிபலிப்பை அறிந்துகொள்வதற்காகவும் இருக்கலாம்.
இதுவரை இப்பரிசோதனை ஒபாமா நிர்வாகம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்கிறது என்பதைத்தான் காட்டியுள்ளது. காசா மீது மற்றொரு இஸ்ரேலிய தரைப்படையெடுப்பு அச்சுறுத்தல் பற்றி வாஷிங்டனின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்டதற்கு, ஒபாமாவின் துணைத் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் இஸ்ரேலின் “தற்காப்பு உரிமையை” உறுதிப்படுத்தி, “இறுதியில் எப்படித் தங்கள் இராணுவ நோக்கங்களைச் செயல்படுத்துவது என்பது பற்றி இஸ்ரேல்தான் முடிவெடுக்கும்” என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையை பொறுத்தவரை, பாதுகாப்புக் குழு காசா நெருக்கடிபற்றி சுருக்கமாகக் கூடியது. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இஸ்ரேல் மற்றொரு இரத்தக்களரிக்கு தயார் செய்கையில் அதற்கு இடையூறாக ஏதேனும் வந்தால் வாஷிங்டன் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிறுத்திவிடும் என்பது உறுதி.
இறுதியாக அரபு நாடுகள் உள்ளன. குறிப்பாக இஸ்ரேல் நீண்டகாலமாக காசா மீதான முற்றுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு எகிப்தில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அரசாங்கத்தை நம்பியிருக்கிறது. எகிப்திய ஜனாதிபதி முகம்மது மோர்சி இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ள தூதரைத் திருப்பி அழைத்துள்ளார். ஆனால் சியோனிச அரசுடன் உறவுகளை முறித்துக் கொள்ளவில்லை. அதேபோல் அவர் ஒபாமாவிடமும் தொடர்பு கொண்டார். ஆனால் இஸ்ரேலைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதியை நம்ப வைப்பதற்குப் பதிலாக, ஒபாமா மோர்சியிடம் ஹமாஸைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
பிரதம மந்திரி ஹெஷம் கண்டில் தலைமையில் வெள்ளியன்று காசாவிற்கு ஒரு தூதுகுழுவை அனுப்பவுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது. இப்பயணம் இஸ்ரேலியத் தாக்குதலை நிறுத்தும் என எதிர்பார்ப்பதற்கு இல்லை.
0 comments :
Post a Comment