ஆயுதக்களஞ்சியம் கைதிகள் கையில். விசேட அதிரடிப்படை தளபதி மீது துப்பாக்கிச்சூடு.
வெலிக்கடை சிறைச்சாலை ஆயுதக்களஞ்சியத்தினை கைப்பற்றிய கைதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் விசேட அதிரப்படையின் தளபதி திரு ரணவண காயமடைந்துள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் இலங்கைநெற் க்கு தெரிவித்தார். சம்பவத்தில் மேலும் 13 விசேட அதிரடிப்படை வீரர்கள் காடமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலையை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள குற்றவாளிகள் அங்கிருந்த ஆயுதங்களை தமது கைகளில் எடுத்துள்ளதுடன் ஆங்காங்கே துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து வருகின்றனர்.
சிறைச்சாலையை சுற்றி வளைத்துள்ள அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் நிலைமைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
இன்று பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலையினுள் நுழைந்து தேடுதல்களை மேற்கொண்டபோது அங்கு ஏற்பட்ட சிறு முரண்பாடு ஒன்றை அடுத்து ஒன்று திரண்ட கைதிகள் சிறைச்சாலை ஆயுதக்களஞ்சியத்தினை கைப்பற்றியதுடன் அங்கிருந்த துப்பாக்கிகளை எடுத்து வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர். இதன்போதே ஸ்தலத்தில் நின்ற விசேட அதிரப்படையின் தளபதி காயமடைந்துள்ளார். இவரின் வயிறு மற்றும் கால்பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது.
சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கு அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் மேலும் பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்திற்கு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்ரிரிஈ சந்தேக நபர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரியவருகின்றது.
குற்றவாளிகளான காடையர்கள் ஆயுதங்களை தமது கைகளில் எடுத்துள்ள நிலையில் அங்கு இருக்ககூடிய தமது எதிரிகளை சுட்டுக்கொல்லலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment