உயிர்களை மாய்க்கவே எமது திறமைகள் பயன்படுத்தப்பட்டன!
சுரேஸ் குமார்(24), தெய்வேந்திரன்(26) மற்றும் ரஜீவன்(34) ஆகியவர்களின் வாழ்வில் புதிய யுகம் பிறந்துள்ளது. தமது திறமைகளை வெளிக்கொண்டுவர முடியாமல், தலைமைகளுக்கு பயந்து முடங்கிக்கொண்டு, ஓர் போராளியாக மாத்திரம் வாழ்ந்த வாழ்கை நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று இவர்கள் மூவரும் உயர்மட்டப் பயிற்சிகளைப் பெறும் விளையாட்டு வீரர்களாவார்கள். இவர்களின் திறமைகளை கண்டறியும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளில் இம் மூவரும் அதீத திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அதனைத்தொடர்நது இவர்களை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க வைக்கும் முகமாக இலங்கை துப்பாக்கிச் சூட்டு சங்கத்தினால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
மனித உயிரை கொல்லுவதற்காக கொடூர பயங்கரவாதிகள் தமது திறமைகளை பயன்படுத்தியதாகவும், இனிமேல் தமது திறமைகளை இலங்கைக்கு பெருமை சேர்ப்பதற்காக பயன்படுத்தப் போவதாக ரஜீவன், தெய்வேந்திரன் மற்றும் சுரேஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து திறமைகளின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 5 பேர் துப்பாக்கிச் சூடு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய இருவரும் தமது புனர்வாழ்வு நடவடிக்கைகளை முடித்த பின்னர் அவர்களது வீடுகளுக்கு சென்றதன் காரணத்தினால் தொடர்ந்து இப் பயிற்சியில் பங்கேற்கவில்லை.
விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை துப்பாக்கிச் சூட்டு சங்கம் ஆகியன இணைந்து, இம் மூன்று விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளதுடன் பல பயிற்சிகளையும் அளித்து வருகின்றது. இவர்கள் தற்போது சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து ஏனைய விளையாட்டு வீரர்களைப் போன்று பயிற்சி பெற்றுவருகின்றனர். இவர்கள் ஏனைய சக விளையாட்டு வீரர்களைப் போன்று அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர்.
இவர்கள் தமது பயிற்சிகளை வெளிசரயில் மேற்கொள்கின்றனர். இதற்கான போக்குவரத்து ஒழுங்கு இலங்கை துப்பாக்கிச் சூட்டு சங்கத்தினால் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூவருக்கும் மாதாந்தம் 15,000/= ரூபாவை வழங்க விளையாட்டு அமைச்சு இணங்கியுள்ளது. இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு என்பன இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர இவர்களுக்கு உதவியாக இரண்டு புனர்வாழ் அதிகாரிகள் உள்ளனர். இவர்களது நாளாந்த தேவைகளில் மொழிரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை தீர்பதற்கு இவர்கள் உதவியாக உள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர், வவுனியா மற்றும் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 135 புனர்வாழ்வு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு இலங்கை தேசிய பயிற்றுவிப்பாளர்கள் முன்னிலையில் திறமைகள் அடையாளம் காணப்பட்டது. இதில் 5 பேர் துப்பாக்கி சூட்டிற்கும், 2 பேர் கிரிகெட், 8 பேர் நீச்சல் மற்றும் 3 பேர் கராட்டி ஆகியவற்றிக்கு தெரிவு செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் இருவரும் சமூகத்தில் இணைந்து அவர்களது குடும்பங்களுக்கு உதவ விரும்பியுள்ளனர்.
நாம் இங்கே ஒரு விடயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் இம் முன்னாள் புலி உறுப்பினர்களை விளையாட்டு துறையில் அதிகாரிகள் ஈடுபடுத்த ஏன் விரும்பினர்? உண்மையிலேயே புனர்வாழ்வு செயற்பாடானது, கல்வி, ஆன்மீகம், பொழுதுபோக்கு, புத்தாக்கம், தொழில்ற்பயிற்சி உட்பட ஒரு மனிதனுக்கு அடிப்படையில் வாழத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதனடிப்படையில் இப் புனர்வாழ்வு அளிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இவர்களில் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அவர்களில் தேசிய ரீதியில் பங்கேற்க திறமைகொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரிய விடயமாகும்.
இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு நடவடிக்கையானது, இவ் இளைஞர், யுவதிகளின் பழைய வாழ்வை மறந்து, புதிய பாதுகாப்பான சமூகங்களுடன் இணைந்து வாழக்கூடிய ஒரு புதிய யுகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு இளைஞனும் தனது முழுத் திறமையை பயன்படுத்தி சிறப்பானதொரு வாழ்வை முன்னெடுக்கவே விரும்புவர்.
ரஜீவன் யாழ்பாணம் திருநல்வேலியை சேர்ந்தவர். இன்று இவர் திருமணபந்தத்தில் இணைந்துள்ளதுடன் இவரது மனைவி கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் 1996இல் விடுதலைப்புலி இயத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சிப்பெற்று பின்னர் இயக்கத்தின் விநியோக செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
ரஜீவன் போரின் இறுதிக் கட்டம் வரை விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்துள்ளார். இவர் 2009 மே 17ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாலில் வைத்து இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். தான் இவ்வாறான ஒரு நிலைமைக்கு வருவேன் என ஒருகாலமும் நினைத்தது இல்லை எனவும், இனிமேல் தனது முழுத்திறமையும் பயன்படுத்தி என்னால் முடியுமானளவு முன்னேறவுள்ளதாக ரஜீவன் கூறினார்.
தெய்வேந்திரன் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் உயர்தர வர்த்தகப்பிரிவு வரை கல்வி கற்று பின்னர் இடம்பெயர்ந்துள்ளார். இவரது குடும்பம் விஸ்வமடுவில் தங்கியிருந்த வேளை, விடுதலைப்புலிகளின் கட்டாய ஆட்சேர்பின் கீழ் விடுதலைப்புலி இயக்கத்தில் இணைந்துள்ளார். தான் முல்லைத்தீவு, முல்லியாவெலியை சேர்ந்தவர் என்றும் தனது குடும்பம் தற்பொழுது முல்லாவெலியில் மீள்குடியமர்த்தப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை துப்பாக்கிச் சூட்டு சங்கம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பாடசாலை மற்றும் கழகங்களுக்கு அதன் சேவையை இனி வரும் காலங்களில் விஸ்தரிக்கவுள்ளது.
இம் மூன்று இளைர்களும் தமது வாழ்வில் என்றுமே நினைத்திராது ஓர் உயரிய நிலையில் தற்போது உள்ளனர். இவர்களது வாழ்வு மேலும் செழிப்புற எமது வாழ்த்துக்கள்.
0 comments :
Post a Comment