மன வளம் குன்றிய யுவதியை கற்பழித்த முதியவருக்கு யாழில் பத்து வருட சிறை!
மன வளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 62 வயது முதியவருக்கு யாழ். மேல் நீதிமன்றத்தால் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
உடுவிலைச் சேர்ந்த கந்தையா தியாகரட்ணம் என்பவரை சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளியாக கண்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் கடந்த வெள்ளிக்கிழமை இக்கடூழிய சிறைத் தண்டனையை விதித்ததோடு குற்றவாளியாக காணப்பட்டு இருப்பவரால் யுவதிக்கு 50000 ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்.
அத்துடன் நஷ்டஈட்டை கொடுக்கத் தவறுகின்ற பட்சத்தில் தண்டனைக் காலம் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
வழக்கின்படி 2007 ஆம் ஆண்டு குற்றச் செயல் இடம்பெற்று உள்ளது. சுன்னாகம் பொலிஸாரால் தியாகரட்ணம் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் சுருக்க முறையற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு பெற்றதும் வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. இவருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த வருடம் மார்ச் மாதம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டவாதி நளினி கந்தசாமி ஆஜராகி வாதாடினார். எதிரியை ஆதரித்து சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா ஆஜராகி வாதாடினார்.
0 comments :
Post a Comment