Sunday, November 25, 2012

எகிப்தில் ஜனாதிபதி முகமது முர்சியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பால் மீண்டும் குழப்பம்

எகிப்து ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி முகமது முர்சி வெளியிட்டுள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஜனாதிபதிக்கு எகிப்து இராணுவம், அரசியல், நீதித்துறையில் வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் வகையிலான அரசியல் சாசன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது நாட்டின் நலனைக் காக்க ஜனாதிபதி எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி வரும் சட்ட நிர்ணய சபையை எந்த நீதிமன்றத்தாலும் கலைக்க முடியாது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இவை தவிர எகிப்தில் இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை அகற்றும் போராட்டத்தின் போது, காயமடைந்து ஊனமடைந்தவர்களுக்கு அதிக ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தன்னை புதிய பார்வோன் (பண்டைய எகிப்து சாம்ராஜ்ய மன்னர்களின் பொதுவான பெயர்) மன்னராக நிலை நிறுத்திக் கொள்ள முர்சி முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com