இலங்கைக்கு எதிராக கை உயர்த்திய நாடுகளுடன் கைகோர்க்க தேவையில்லை: விமல் வீரவன்ச!
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத நாடுகளுடன் உறவுகளைப் பேணுவோம்..
ஜெனீவாவில் எமக்கெதிராகக் கை உயர்த்திய நாடுகளுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளு மன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத நாடு களுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு முன் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வெளிநாட்டுத் தலையீடுகளை நாட்டுக்குள் ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முனைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, வெள்ளையர்களை வைத்துக் கொண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கான திட்டங்களை வகுத்த ஐ. தே. க. போன்று செயற்பட வேண்டிய தேவை எமது அரசாங்கத்துக்குக் கிடையாது எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
பொருளாதார நோக்கு மற்றும் நிதிக் கொள்கை பற்றி விரிவாக ஆராய்ந்தே வரவு செலவுத் திட்டத்தை நாம் பார்க்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கையில் இருந்தவாறு விவாதங்களை முன்வைக்கின்றனர். மஹிந்த சிந்தனை மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றும் வகையிலேயே இவ்வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்டே விவாதிக்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் அண்மையில் சீனா சென்றிருந்தபோது இலங்கையின் உற்பத்திகளை தமது சந்தைக்குக் கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டது. சீனா ஒருபோதும் இலங்கையின் விடயத்தில் தலையிடுவதில்லை. இதனை அந்நாடு பல தடவைகள் வலியுறுத்தியுள்ளது. சீனா இலங்கையை விழுங்கிவிட்டதாக முன்வைக்கப்படும் கூற்றுக்களில் உண்மை இல்லை. உள்நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாத நாடுகளுடனேயே கூடுதலான தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.
இந்த நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமையவே நாட்டின் பொருளாதாரத்தையும், நிதிக் கொள்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கும். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே நிதிக் கொள்கைகள் அமுல்படுத்துகின்றன. அபிவிருத்தியை நோக்கி அரசாங்கம் செல்லும் பயணத்தைப் புரிந்து கொள்ளாதே எதிர்க்கட்சிகள் அதனை விமர்ச்சிக்கின்றன. எனவே, எதிர்வரும் காலத்திலாவது இதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment