எம்மண்ணிலிருந்து எமது கலாச்சார பண்பாடுகளை எவராலும் பிரிக்க முடியாது . சந்திரகுமார்.
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பலருக்கு தமிழே தெரியாது!
எமது இனத்தின் கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை எமது மண்ணிலிருந்து பிரிக்க முடியாது அதைப் பாதுகாக்கும் அக்கறை எம் மக்களுக்கு இருக்கிறது எந்த நாகரீகத்தின் வருகையும் நவீன தொழிநுட்பங்களின் வருகையும் எந்தவிதத்திலும் எமது மண்ணின் கலை கலாச்சார பண்பாட்டு விழிமியங்களை பாதித்துவிடாது என்ற நம்பிகை எமக்குண்டு நவீன நாகரீகம், உயர் தொழிநுட்பம் ஆகியவற்றின் வருகையினை நாம் தடுத்துவிடமுடியாது தடுக்க கூடாது அவற்றின் நன்மைகளையும் எமது சமூகம் பெற்றுக்கொள்ளவேண்டும் இல்லையெனில் நாம் நவீன உலகிலிருந்து அன்னியப்பட்டுவிடுவோம். எனவே இவற்றுகளுக்கு மத்தியில் சமூக விழிப்புணர்களை ஏற்படுத்தி எமது தனித்துவத்தை பாதுகாத்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் நேற்று(18) கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கலாச்சார விழாவில் பிரதம விரந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கண்டாவளை பிரதேசத்தின் கலாச்சார விழாவை கண்டாவளை கிராமத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை பொருத்தமான ஒன்றாகவே கருதுகிறேன். கண்டாவளை கிராமம் இந்த பிரதேச செயலக பிரிவில் பழமையான வரலாறுகளை கொண்ட ஒரு கிராமம், அப்படியான ஒரு கிராமத்தில் கலாச்சார விழா கொண்டாடுகின்றமை பொருத்தமானதே.
இங்கு உரையாற்றிய பலர் தழிழை பற்றியும், தமிழை வளர்ப்பது பற்றியும் பேசியிருந்தார்கள், உண்மையிலேயே தமிழ் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மொழி. அந்த மொழியுடன் கூடிய கலை கலாச்சார பண்பாட்டு விழிமியங்களுக்கு பல நூற்றாண்டு வரலாறுகள் உண்டு தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட ஆறு கோடி தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஆனால் அங்குள்ள தமிழ் அறிஞர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழை பற்றியே பெருமையாக பேசுகின்றார்கள் இலங்கைத் தமிழின் பேச்சு வடிவிலும், எழுத்து வடிவிலும்தான் உண்மையான தமிழின் அர்த்தமும் அழகும் உள்ளதாக பெருமையாக பேசுவார்கள்.
எனவே அப்படிப்பட்ட தமிழ் அவர்களால் நேசிக்கப்படுகின்ற தமிழ் இங்கு மட்டுதான் அதிகமாக இருக்கிறது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழை பற்றியும் தமிழை வளர்ப்பது பற்றியும் பேசி வருகின்ற நிலையில் உண்மையிலேயே தமிழை யார் வளர்க்கின்றார்கள் என்றால் அது இந்த மண்ணில் வாழ்கின்ற தமிழர்கள்தான். இன்று புலம்பெயந்து வாழ்கின்ற ஏராளமான எம் மக்கள் தமிழில் அக்கறையாக இருக்கின்றார்கள். தமிழை இயன்றளவு வளர்க்கின்றார்கள் ஆனால் அவர்கள் மிகப்பெரும் சவால்களுக்கு மத்தியில்தான் தமிழை வளர்க்கின்றார்கள்.
புலம்பெயர் தமிழர்களின் இளம் சமூகத்தின் பலருக்கு தமிழ் தெரியாது அவர்களுக்கு தமிழை கற்பிப்பதற்கு, பேசவைப்பதற்கும் எம்மவர்கள் மிகவும் திண்டாடுகின்றார்கள் அதற்காக பல தமிழ் பாடசாலைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். இருப்பினும் அது பெரியளவில் வெற்றியளிக்கவில்லை மேலைத்தேய கலாசாரங்களின் ஆதிக்கம இதற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த தாக்கம் இங்கு வாழ்கின்ற தமிழ்ர்களிடம் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தப்போகிறது என்ற அச்சம் காணப்படுகிறது தென்னாபிரிக்காவில் இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு பின்னர் இன்று தமிழை மறந்து விட்டார்கள்.
எனவேதான் தமிழை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் இன்றும் இந்த மண்ணில் ஆதாவது வடக்குகிழக்கில் வாழ்கின்ற மக்கள்தான் தமிழை வளர்த்தும் பாதுகாத்தும் வருகின்றார்கள் . இங்குதான் பல சோதனைகள் வேதனைகளுக்கு மத்தியிலும் தமிழும் அதன் கலை கலாச்சார பண்பாட்டு விழிமியங்களும் பாதுகாக்கப்படுகிறது மீள்குடியேறி முன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்த அவர்
அவர் மேலும் அங்கே குறிப்பிடும்போது,
எனவே இவற்றுக்கெல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அபிவிருத்தியில் ஒன்றிணைய வேண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்கள் துரித அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக மாறியிருக்கின்றன. இதற்கு காரணம் அந்த பிரதேச மக்கள் அபிவிருத்தியில் பங்காளிகளாக மாறியிருக்கின்றார்கள். அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பது வெறுமனே அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் தலைகளில் சுமத்திவிடுகின்ற விடயமல்ல , அபிவிருத்தியில் மக்கள் எப்பொழுது பங்காளிகளாக மாறுகின்றார்களோ அன்று அந்த பிரதேசங்களும் துரித அபிவிருத்தியை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும்.
எனவே கண்டாவளை மக்களும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் எம்மோடு கைகோர்த்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுகின்றேன். கிராமவாதங்கள் பிரதேச வாதங்களுக்கு அப்பால் எல்லா மக்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாக நாம் அனைவரும் மாறவேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.
பிரதேச செயலர் முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் பளை பிரதேச செயலர் சத்தியசீலன் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் மாவட்டச்செயலக உதவிதிட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன் ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரி வைரமுத்து பிரதேச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் கலாச்சார உத்தியோகத்தர் பணியாளர்கள் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment