ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் அமெரிக்க ராணுவ முகாம் செயல்பட்டு வந்தது. இந்த ராணுவ முகாம் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையில், நேற்று காலை வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு அங்கே வந்த ஒரு ஆசாமி, அமெரிக்க ராணுவ முகாம் வளாக சுவரில் மோதி வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.
இதில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த காவலாளிகள் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய ஆசாமியும் உடல் சிதறி பலியானான். இரண்டு காவலாளிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஆசாமி முதலில் பலியானான்.
அவனுடன் ஆப்கானிஸ்தான் காவலர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 2 காவலாளிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதியினை போலீஸ் படை சுற்றி வளைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.
இது தொடர்பாக தலீபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித், ரெயிட்டர் செய்தி நிறுவனத்துக்கு போனில் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடப்பதாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியது. மனித வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் தூதரகத்தின் சங்கு ஒலித்ததாகவும், ஆம்புலன்சுகள் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தாகவும் நேரில் கண்டவர்கள் கூறினர்.
0 comments :
Post a Comment