2013ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஜ.தே.க எதிர்ப்பு
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை எதிர்த்தே வாக்களிப்போம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கொண்டிருக்கவில்லை. இதனால் இந்த வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொருளாதார கஷ்டங்களினால் துன்பப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை இந்த வரவு – செலவுத்திட்டம் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்த வரவு – செலவுத்திட்டத்திற்கு எங்களினால் ஆதரவளிக்க முடியாது.
2005ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கின்றபோதிலும், அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 2007ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்திற்கு மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாக வாக்களித்தது.
வரவு – செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்; நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வரவு – செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடையும்வரை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் விவாதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்சி தலைமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment