உலக பாரிசவாத (பக்கவாத) தினம். World Stroke Day- புன்னியாமீன்.
இன்று உலக பாரிசவாத தினமாகும். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 29ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இம்மரணங்களில் 80% வறிய மற்றும் வளர்முக நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
இலங்கையில் நாளொன்றுக்கு 40-50 பேரளவில் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு 2012 அக்டோபர் 28ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் என்றபடி பாரிசவாதத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இலங்கையில் வைத்தியசாலைகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணைபுரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது. அதேநேரம் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இரு மடங்குகள் படி அதிகரித்து வருகின்றது. அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இலங்கையில் 15-59 வயதுக்கு இடைப்பட்டோரின் மரணத்திற்கு துணைபுரியும் காரணிகளில் பாரிசவாதம் 5 வது இடத்தில் உள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பாரிசவாதம் (Stroke) என்றால் என்ன?
எமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் செயற்படுவதற்கு அடிப்படைச் சக்தியைக் கொடுப்பது ஒட்சிசனாகும். இந்த ஒட்சிசன் இரத்தத்தினூடாக ஒவ்வொரு உறுப்பையும் சென்றடைகிறது. இரத்தம் செல்லும் குருதிக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் (அடைபடுவதால் அல்லது வெடிப்பதால்) மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் துண்டிக்கப்படுவதினால் கை, கால் (அல்லது வேறும் உறுப்புகள்) இயங்கமுடியாத நிலையை அடைகின்றது. இத்தகைய நிலையே பாரிசவாதம் ஸ்ரோக் (Stroke) அல்லது cerebrovascular accident(CVA) என அழைக்கின்றோம். அதாவது இதயத்திற்கு குருதியைக் கொண்டுசெல்லும் குருதிக்குழாய்கள் அடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுவதைப் போல. நமது மூளைக்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் பாரிசவாதம் ஏற்படுகின்றது.
குருதிக் குழாய்களில் கொழுப்பு (கொலஸ்ரோல்) படிவுகளாக (atherosclerosis) ஏற்படும் போது உறைந்த குருதிக் கட்டிகள் குருதிக் குழாய்களைகளை அடைக்கும் சந்தர்ப்பத்திலும், குருதிக் குழாய்கள் வெடிப்பதாலும் பாரிசவாதம் ஏற்படலாம். குறிப்பாக அதிக இரத்தம் அழுத்தம் உடையவர்களுக்கே இது அதிகமாக ஏற்படக் கூடிய நிகழ்தகவுண்டு.
பாரிசவாத வெளிப்பாடு சடுதியாக ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு. இந்த நோயின் தீவிரமானது பாதிக்கப்பட்ட குருதிக் குழாயைப் பொறுத்து வேறுபடும். சிறிய குருதிக் குழாய் ஒன்று அடைபடுவதால் ஏற்படும் பாதிப்பு சிறிதளவானதாகவே இருக்கும். மேலும் மூளையின் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான தொழிற்பாடுகளுக்கு பொறுப்பாக இருக்கும். பாதிக்கபட்ட பகுதியைப் பொறுத்து ஏற்படுகின்ற அறிகுறிகளும் வேறுபடலாம். உதாரணத்திற்கு பேச்சினைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டால் அந்த நபர் பேச முடியாத நிலையை அடைவார். மூளையின் பல பகுதிகளுக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய்கள் பாதிக்கப்படும் போது பல பாதிப்புக்கள் ஏற்படலாம்.
பாரிசவாதமானது உயர் குருதி அமுக்கம், நீரழிவு நோய், அதிகரித்த கொலஸ்ரோல் அளவு, புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினால் ஏற்படலாம். மேலும் அதிகரித்த உடற்பருமன், வயதானவர்கள், ஆண்கள், பரம்பரையிலே மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்பட்டவர்களைக் கொண்டவர்கள், அளவுக்கதிகமாக மது அருந்துபவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்களாவர்.
அறிகுறிகளும், அடையாளங்களும்
பாதிக்கப்பட்ட குருதிக் குழாயை பொறுத்து இதன் அறிகுறிகள் வேறுபடலாம். பொதுவாக
* சடுதியாக கடும் தலைவலி
* குழப்பம், உறுதியற்ற உணர்வு நிலை
* சுயநினைவின் அளவு பாதிப்படைதல் ( உடனடியாக அல்லது படிப்படியாக)
* வாயிலிருந்து எச்சில் வடிதல்
* பேச்சுத் தடுமாற்றம் அல்லது பேச முடியாமை
* கண்மணிகள் சமமாக இல்லாமை அல்லது இரட்டைத் தோற்றம்
* சூடான, உலர்ந்த, சிவத்த சருமம்
* சிறுநீரை, மலத்தை கட்டுப்படுத்த இயலாமை
பாரிசவாதத்தால் உடலின் ஒரு பகுதி பாதிக்கப்படலாம். முற்றிய நிலையில் முற்று முழுதான மயக்க நிலை (Coma) அல்லது ஊனமுற்ற நிலை அல்லது மரணம் ஏற்படக்கூடியதாகவும் இருக்கலாம்.
இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்...
மாரடைப்பைத் தடுப்பதற்கு நாம் எதைச்செய்ய வேண்டுமோ அதுவே இந்த பாரிசவாத நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவும். உதாரணமாக
* நீரழிவைக் கட்டுப்பாடாக வைத்திருத்தல்
* இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடாக வைத்திருத்தல்
* கொலஸ்ரோலைக் கட்டுப்பாடாக வைத்திருத்தல்
* உடற்பயிற்சி மூலம் உடல் நிறையைக் கட்டுப்பாடாக வைத்திருத்தல்
* மன அழுத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளல் மேலும்
* மதுப்பாவனை, புகை பிடித்தல் பாவனை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு உப்பு பாவனையைக் குறைப்பதுடன் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகளவில் உட்கொள்ளல் போன்றவற்றின் மூலம் பாரிசவாத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஒருவருக்கு திடீரென பாரிசவாத ஏற்பட்டால் பாதிப்புற்றவரின் சுவாசப்பாதையை பேணவேண்டும். பாதிப்புற்றவர் சுயநினைவுடனிருந்தால் அவரைக் கீழே இருத்தி தலையையும் தோள்களையும் உயர்த்தி வைக்கவேண்டும். எச்சில் வடிந்தால் தலையை ஒரு பக்கத்திற்கு திருப்பி வைப்பதுடன் இறுக்கமான ஆடைகளை தளர்த்தி விடவும். பாதிப்புற்றவர் சுயநினைவற்றிருந்தால் அவரை தேறும் நிலையில் இருத்தி சுவாசத்தை கண்காணிக்கவும். பாதிப்புற்றவருடன் அமைதியாகவும் மெதுவாகவும் கதைக்கவும். சில நேரங்களில் அவரது பதில் விளங்காதிருக்கக்கூடும் அதனால் நாம் நிதானத்தைப் பேணவேண்டும். எதனையும் குடிக்கக் கொடுக்க வேண்டாம். நோயுற்றவரை தகுந்த வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
உசாத்துணை:
http://www.worldstrokecampaign.org/media/Pages/AboutWorldStrokeDay2010.aspx
http://www.medicalnewstoday.com/releases/205835.php
http://newsroom.heart.org/pr/aha/international-stroke-conference-213434.aspx
http://karinloiske.blogspot.com/2012/05/international-stroke-day.html
http://en.wikipedia.org/wiki/World_Stroke_Day
0 comments :
Post a Comment